கொச்சைப்படுத்துவது இழுக்கு

கொழும்பில் 2011 ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மகா நாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டிலிருந்து எழுகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையைக் கையாளத் தெரியாமல் நந்தவன ஆண்டியைப் போலப் போட்டுடைத்துத் தமிழ் மக்களை அவல நிலைக்குத் தள்ளியவர்களுக்குத் துதி பாடியவர்களே புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்ற முத்திரையைக் குத்திக்கொண்டவர்களும் இருவர் இந்தக் கூட்டத்தில் உள்ளனர். இவர்கள் இலங்கை மண்ணில் காலடி வைத்துப் பல தசாப்தங்கள் ஆகிவிட்டது.

இலங்கையில் எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் வாழ்கின்றது. நல்ல தமிழ் வாழ்கின்றது. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் தமிழுக்கு விழா எடுக்கவும் தமிழின் வளத்தைப் பேணி வளர்க்கவும் இலங்கை வாழ் தமிழர்கள் பின்னிற்பதில்லை. இலங்கையில் வாழ்பவர்களும் புலம் பெயர்ந்தவர்களுமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியாகச் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் மகாநாடொன்றை இலங்கையில் நடத்துவதற்குத் தமிழகத்திலிருந்து ஏன் எதிர்ப்பு வரவேண்டும் என்பது விளங்கவில்லை.

இதுபோன்ற மகாநாடுகள் தமிழகத்தில் மட்டுமே நடைபெற வேண்டுமென்ற மேலாதிக்க மனோபாவம் காரணமா? அல்லது இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை இரண்டாந்தரமானவர்கள் எனக் கருதும் மனோபாவம் காரணமா?

மகாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பவர்களே இலங்கையில் தமிழ் அழிந்துபோகின்றது என்று அடிக்கடி கூச்சல் போடுகின்றார்கள். தமிழை அழியவிடாமல் காப்பது மட்டுமன்றித் தமிழை வளர்ப்பதும் இலங்கைத் தமிழ் மக்களின் பேரவா. இதற்காக எத்தனையோ விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இவை போன்றதே சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடும்.

புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் விழாக்களை வந்து பார்க்க வேண்டும். அங்கு பேசப்படும் நல்ல தமிழைக் கேட்க வேண்டும். தமிழ் மொழியை வளர்ப்பதில் இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை அப்போது இவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

உடன் பிறப்புகள் என்றும் உல கெங்கும் பரந்து வாழும் தமிழர் கள் ஒரே குடும்பம் என்றும் அடிக்கடி பேசும் தமிழகப் பிரமுகர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைத் தனிமைப் படுத்துவது வேடிக்கையாக இருக்கின்றது.

தமிழ் மொழியை வளர்ப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் வேறெந்தத் தமிழ் எழுத்தாளர்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தவர்கள ல்ல. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நடத்துவதற்கு இலங் கைத தமிழ் எழுத்தாளர்களுக்கு உள்ள உரிமையை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கும் இன, மத வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்றிணைந்து நடத்தவுள்ள இந்த மகாநாட்டைக் கொச்சைப்படுத்துவது தமிழகப் பிரமுகர்களுக்கு இழுக்கு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply