நொந்து போன மக்களின் எதிர்கால விமோசனத்துக்காகச் சிந்திப்பதே இன்று பிரதானமாகும்.

புலிகள் இயக்கத்தில் முன்னர் உறுப்பினர்களாகவிருந்தோரில் 508 பேர் நேற்று முன்தினம் வவுனியா, பம்பைமடுவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் ஒரு வருட காலத்துக்கு முன்னர் ஆயுதமேந்தி யுத்தம் புரிந்தவர்கள்.

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் அகப்பட்டுக்கொண்ட இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் இப்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெறுமனே தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மேற்படி இளைஞர், யுவதிகளுக்கு எதிர்கால நலனுக்கான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பயிற்சிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் சுயதொழில் மேற்கொண்டு வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு இவர்களுக்கு வழியேற்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்துக்கு பலவந்தமாக சேர்க்கப்பட்டோரே இவர்களில் கூடுதலாக உள்ளனர். புலிகள் அளித்த மூளைச்சலவை மற்றும் ஆயுதம் மீதான கவர்ச்சியின் பேரிலும் கணிசமான இளைஞர், யுவதிகள் அக்காலத்தில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் சென்றதனால் அவர்கள் கல்வி கற்று உயர்நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

அதேசமயம் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் அக்காலப் பகுதியில் பாடசாலை மாணவர்களைக் கூட தங்களது இயக்கத்துக்கென பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர். இவர்களில் எத்தனையோ திறமையான, அப்பாவியான மாணவர்கள் கல்வியை மாத்திரமன்றி தங்களது உயிரையும் இழந்துள்ளனர். புலிகள் இயக்கம் தனது சொந்த மக்களுக்கே அளித்த ‘ஜனநாயகம்’ இத்தகையதாகவே இருந்தது.

வன்னியில் இறுதிக் காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது படையினரின் கட்டுப்பாட்டில் வந்து சேர்ந்த இளைஞர், யுவதிகளே தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை அரசாங்கம் புறந்தள்ளவில்லை.

புலிகளின் பலவந்தத்தின் பேரில் அறியாப் பருவத்தில் அவ்வியக்கத்தில் சேர்ந்த அவர்களின் எதிர்காலம் பாழாகக் கூடாதென்பதற்காகவே அவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டு தொழிற்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் உண்மையிலேயே நரகத்திலிருந்து மீட்கப்பட்டவர்களாவர். புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்படாது போயிருந்தால் இவ்விளைஞர்களினதும் யுவதிகளினதும் எதிர்காலம் இருண்டதாகவே இருந்திருக்கும். இவர்களெல்லாம் இப்போது மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

தலைமைகளின் சுயநலனுக்கான தவறுதலான வழிகாட்டலின் விளைவாக வாழ்வையே அழித்துக்கொண்ட ஏராளமான தமிழ் இளைஞர், யுவதிகளின் பரிதாபம் குறித்து இவ்விடத்தில் நாம் நினைத்துப் பார்க்காமலிருக்க முடியாது. தமிழ் அரசியல் தலைவர்களின் சுயநலம் காரணமாகவும் ஏராளமான இளைஞர்கள் தங்களது வாழ்வையே அழித்துக்கொண்டுள்ளனர். இத்தகைய அபத்தமான முடிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகுந்த சிந்தனைக்குரியவையாகும்.

‘தமிழீழம்’ என்பது நிறைவேற முடியாத கருதுகோள் என்பது நிரூபணமாகிவிட்டது. தமிழ்த் தலைவர்கள் அன்றைய காலத்தில் தமிழ் இளைஞர்களைப் போராடத் தூண்டியதன் விளைவை தமிழ் சமூகம் அனுபவித்துவிட்டது. போலியான கோஷங்களால் இனிமேலும் தமிழ்ச் சமூகத்தை ஏமாற்றலாகாது. சமுதாய முன்னேற்றத்திலேயே இனிமேல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.”

இதுவே முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்துக்களின் சாராம்சம் ஆகும். நிறைவேற முடியாத கோஷங்களை முன்வைத்து தமிழ் இனத்தை ஏமாற்றுவதாலோ, கடந்த கால இழப்புகளை ஞாபகமூட்டி அரசியல் நடத்துவதாலோ இனிமேல் ஆகப் போவது எதுவுமேயில்லை. நொந்து போன மக்களின் எதிர்கால விமோசனத்துக்காகச் சிந்திப்பதே இன்று பிரதானமாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply