வவுனியா நகரசபைத் தலைவரின் சர்வாதிகாரப் போக்கிற்கு கண்டனம்
வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தை நகரசபைத் தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை இடை நிறுத்தி வைத்ததையடுத்து சபை உறுப்பினர்கள் 10 பேரும் மேற்படி சனநாயக விரோதச் செயலை கண்டிப்பதாகத் தெரிவித்து அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கொளுத்தும் வெய்யிலில் சுமார் இரண்டு மணி நேரம் வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு உறுப்பினர்கள் அமைதியான முறையில் மைதானத்தின் நடுவில் அமர்ந்திருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவர் முகுந்தரதன் உள்ளிட்ட உறுப் பினர்களான எஸ். சுரேந்திரன், எஸ். சிவகுமார், இ. கனகையா, புளொட் உறுப்பினர்களான எதிர்க்கட்சி தலைவர் ரி. லிங்கநாதன், சு. குமாரசாமி, பார்த்திபன், பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் லலித் ஜயசேகர, அப்துல்பாரி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எல். முனாபர் ஆகிய பத்து சபை உறுப்பினர்களும் தலைவரின் நடவடிக்கையினை ஆட்சேபித்து கட்சி பேதமற்ற முறையில் தாங்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியதாக குறிப்பிட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களாக சீரான நடவடிக்கைகளின்றி பாதிக்கப்பட்ட சபை அமர்வுகளைத் தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற விசேட கூட்டத்திலும் சபை உறுப்பினர்கள் சபையின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டிருந்த 29 விடயங்களுக்கு விளக்கமளிக்காமல், அவை தொடர்பாக சபையில் விவாதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காததுடன், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்ததும் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு வெளியேறியதாகவும் சபை உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அவரது இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே தாங்கள் மைதானத்தில் அமர்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பொதுமக்களை இணைத்துக் கொண்டு தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்திற்கு வருகை தந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக இந்த மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதுடன், அதுவரையில் தமக்கு கால அவகாசம் தருமாறும் கேட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், எட்டு உறுப்பினர்கள் கோரியிருந்த 29 விடயங்கள் தொடர்பாக உயர் மட்டத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால், அவை குறித்து சபையில் விவாதிக்க முடியாது என்றும், சபை உறுப்பினர்களே தம்முடன் ஒத்துழைக்கின்றார்களில்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய விசேட கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சேர்க்கப்படாததனால், அதனை சபையில் எடுக்கவில்லை என்றும் நிசழ்ச்சி நிரலுக்கமயை ஏனைய செயற்பாடுகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் இன்றைய கூட்டத்தில் நடைபெற்றவை குறித்து ஆளுனருக்கு விபரமாகத் தெரிவிக்கப் போவதுடன், உறுப்பினர்கள் ஒத்துழைக்காத காரணத்தினால், சபையைக் கலைத்துவிடுமாறு ஆளுனருக்கு சிபாரிசு செய்யப் போவதாகவும் செய்தியாளர்களிடம் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply