கரடியனாறு வெடி விபத்து; பொலிஸ், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் நிரப்பிய கொள்கலன் வெடிப்புக்கு திடீர் விபத்தே காரணம், நாச வேலை காரணமல்ல என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரும், குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் நடாத்திய புலன் விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டைனமைற் வெடி மருந்து நிரப்பிய இரு கொள்கலன்கள் நேற்று முன்தினம் வெடித்துச் சிதறிய சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நேரில் சென்று திரும்பிய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

இச் சம்பவத்தில் 12 பொலிஸாரும், 07 பொது மக்களும், 02 சீன பிரஜைகளுமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இச் சம்பவத்தில் 19 பொலிஸாரும் 21 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸாரில் நால்வர் மேலதிக சிகிச்சைக் காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்திய சாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று கூறின.

இதேவேளை மட்டக்களப்பு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெறுபவர்களில் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வில்லை. இச் சம்பவத்தில் காயமடைந்து எமது ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை தேறிவருவதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் கந்தசாமி முருகானந்தம் கூறினார்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு தொகுதியினர் இன்று அல்லது நாளை வீடு திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் இச் சம்பவம் காரணமாக உயிரிழந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டு அடையாளம் காணப்பட்ட வர்களின் பிரேதங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜேகுணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

இச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும், இரு பொலிஸ் குழுக்களும் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸ் விசாரணை குழுக்களுக்கு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன தலைமை வகிக்கின்றார்.

இச் சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. எனினும் காயமடைந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் உடனடியாக வாக்கு மூலம் பெற முடியாது.

இச் சம்பவம் தொடர்பான விசார ணைகளை மிகத் துரிதமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பிக்கப்படும்.

சீன நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான கொள்கலன் பொருத்தப்பட்ட வாக னத்திலிருந்த வெடிமருந்துகளே வெடித் துள்ளன. இதில் வேறு எவ்வித சந்தேக முமில்லை.

இந் நிலையில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் வாக்கு மூலம் பெறப்பட வுள்ளது. தேவையேற்படின் பொது மக்கள் மூலமாகவும் தகவல்கள் பெறப்படும்.

வெடிப்புச் சம்பவம் இடம் பெற்ற இடத்தை விசாரணைக் குழுக்கள் நேரடியாகப் பார்வையிட்டு தடயங்கள் மற்றும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.

ஆயித்தியமலையில் பொலிஸ் நிலையம்

இதேவேளை சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பொலிஸ் மா அதிபர், கரடியனாறு பொலிஸ் நிலையக் கட்டிடம் சிதைவடைந்திருப்பதால், கரடியனாறு பொலிஸ் பிரிவு நடவடிக்கைகளை தற் காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து மேற்கொள்ளுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளார். அதேநேரம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தைத் துரித கதியில் பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply