வரலாற்றுக் கடமை : வி. தேவராஜ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வுப் பொதியினை முன் வைக்க வேண்டு மென்ற கோரிக்கையை இப்பந்தியில் முன் வைத்திருந்தோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தையும் தவிர பல தரப்பினரும் இந்தக் கோக்கை குறித்து சாதகமாகவே பரிசீலித்தனர். கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கும் உள்ளது என்ற ஒரு கோரிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் சார்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதேயன்றி அவர்களைச் சங்கடத்திற்குள்ளாக்குவதற்காக அல்ல என்பதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
வெளிநாட்டு தூதுவர்களையோ அல்லது தூதரகங்களின் உயர் அதிகாரிகளையோ அல்லது வெளிநாட்டு ஆய்வாளர்களையோ ஏன் சிங்களத் தரப்பினர் கூட தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்கும்போது அதற்கான பதிலைக் கொடுப்பது சிரமமாகவே உள்ளது.
ஏனெனில், தனிநாட்டுக்குப் பதிலீடாக இதுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதைக் கூட கூற முடியாத நிலையில் நாம் அனைவரும் உள்ளோம் என்ற கசப்பான உண்மையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
இதற்கும் அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை என்ன? எதிர்பார்ப்பு என்ன? என்ற கேள்விக்கு வெறுமனே பிரச்சினைகளைத் தான் நாம் அடுக்கிக் கொண்டு போகின்றோம்.
திட்டவட்டமான தீர்வு என்பது எம்மவடம் இல்லை.
எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை, எதிர்பார்ப்பு என்பவற்றை “அரசியல் தீர்வு” என்ற ஒரு பதத்துடன் முடித்து விடாது அதற்கு உயிர், உருவம் கொடுத்தாக வேண்டும்.
பொதுத் தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அரசியல் தீர்வுப் பொதி” குறித்து நிறையவே பேசியது.
“தீர்வுப் பொதி” விரைவில் தயாராகும், இந்தியாவிடம் சமர்ப்பிக்கப் போகின்றோம் என்றும் கூறியது. ஆனால், இப்பொழுது அனைத்தையும் கிடப்பில் போட்டு விட்டு அமைதியாக இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரமல்ல அவர்களை ஆதரித்து நின்ற தமிழ் மக்களுக்கும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை உலகம் அறி யும். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கணிசமான தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரித்து நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி வைத்தனர்.
அந்த வகையில் தமிழ் மக்களின் அபிலாஷையைத் தீர்வுப் பொதியாக முன் வைக்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்புக்கு உண்டு.
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக மாத்திரமல்ல, செயல் ரீதியிலும் அரசுடன் இணைந்து பங்காற்றியவர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரை அரசியல் தீர்வுக்கு சாத்திய மில்லை என்று கூறியவர்களும் இவர்களில் உள்ளனர்.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை.
புலிகள் இல்லாத மண்ணில் அரசாங்கத்தை இசைய வைத்து அரசியல் தீர்வை முன்வைத்து நடைமுறைப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கொண்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கு தீர்வுப் பொதியை முன்வைப்பதுடன், தமது ஆதர்சன அரசை அந்தத் தீர்வுப் பொதியை நடைமுறைப்படுத்தும் பெரும் பணியையும் தலைமேல் கொண்டுள்ளதையும் இவ்வேளையில் நினைவுப்படுத்த வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரை ஒப்புக்காகவேனும் அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து பேசி வந்தது.
தற்போது அரசியல் தீர்வு குறித்த பேச்சையே அரசாங்கம் எடுப்பதில்லை.
அது மாத்திரமல்ல காலத்துக்குக் காலம் தமிழ் தரப்பு பலவீனப்படும் பொழுது அல்லது கையறு நிலையில் நிற்கும் போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆளுந்தரப்பு தமது நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப தமிழ்த் தரப்பை ஆட வைத்து விடும் அல்லது தவிர்க்க முடியாத நிலையில் ஆளுந்தரப்பின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்வாங்கப்படும் சூழ்நிலையை ஆட்சியில் இருப்போர் தமிழ் தரப்புக்கு உருவாக்கி விடுவதும் வழக்கமான நாடகமாக உள்ளது.
அத்தகைய ஒரு நாடகத்தை இன்றைய ஆளுந்தரப்பும் இன்று அரங்கேற்றியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கு தமிழர் தரப்பில் காத்திரமான சக்தியாக எவரும் இல்லை என்று அரசாங்கம் திடமாக நம்புகின்றது.
அது உண்மையும் கூட.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் தமிழ் மக்களின் மக்களின் அபிலாஷைகளும் வீழ்ந்து விட்டதாக சிங்களத் தரப்பு நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் அவ்வாறு நினைக்கவில்லை. “அரசியல் அபிலாஷை” என்பது தகர்க்கப்படக் கூடியதோ, குழிதோண்டிப் புதைக்கப்படக் கூடியதோ அல்ல என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.
இந்த உண்மையை அரசாங்கத்துக்கும், உலகத்திற்கும் உணர்த்த வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ்க் கட்சிகளின் அரங்கிற்கும் உள்ளது. தமிழ் மக்கள் கேட்பதை ஆளுந்தரப்போ அல்லது சிங்களத்தரப்போ கொடுக்காது என்பதற்காக கேட்காமல் இருப்பது நியாயமில்லை.
நியாயமானதை, நீதியானதை கேட்பது தவிர்க்க முடியாதது. தவிர்க்கப்படக் கூடியதும் அல்ல.
அந்த வகையில் தற்போது தமிழ் மக்களின் சார்பில் தீர்வுப் பொதியை முன்வைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் சுமந்துள்ளன.
தமது வரலாற்றுக் கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து இவர்கள் செயற்படுவார்கள் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: வீரகேசரி
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply