புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு
புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கென தொழில் வாய்ப்பு சந்தையொன்று நாளை புதன்கிழமையும் நாளை மறுதினமும் வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
புனர் வாழ்வளிப்பையும் தொழிற் பயிற்சியையும் நிறைவு செய்தவர்களுக்கே இந்த தொழில் வாய்ப்புச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
ஆடைத்தொழிற்துறை மற்றும் நிர்மாணத்துறை போன்ற பல்வேறு துறைகளையும் சேர்ந்த 25 தனியார் துறை நிறுவனங்கள் இந்த தொழில் வாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,800 விடுதலைப்புலி உறுப்பினர்களை அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென தெரிவு செய்து உட்படுத்தியது.
விசேட புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 4 ஆயிரம் முன்னாள் போராளிகளை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை பெற தயார்ப்படுத்திக் கொள்ள இவர்களுக்கு 12 புனர்வாழ்வு நிலையங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த தொழில்வாய்ப்பு சந்தைக்கு சமாந்தரமாக நடைபெறும் வைபவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 418 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்படவிருப்பதாக பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரம் முன்னாள் போராளிகளை அடுத்த மாதம் விடுதலை செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply