பட்டினிச்சாவை எதிர்நோக்கும் மாந்தையில் மீள்குடியேறிய குடும்பங்கள்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் பலவற்றிற்கு உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்டு வந்த நிவாரண உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த இடங்களில் மீள்குடியேறி ஒன்பது மாதங்கள் கழிந்துள்ளதையடுத்தே இந்தக் குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரண உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மீள்குடியேறும் குடும்பங்களுக்கு 6 மாதங்கள் வரையில் நிவாரணமாக உலக உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, மா, பருப்பு, சீனி, மரக்கறி எண்ணெய் என்பன வழங்கப்பட்டன. வழங்கப்பட்டு வந்ததாகவும், எனினும் இந்த விநியோகம் ஒன்பது மாதங்கள் வரையில் நீடிக்கப்பட்டு, ஒன்பது மாதங்களின் பின்னர் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினால், விவசாயம் உள்ளிட்ட தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படாத குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, நாளாந்தம் இரண்டு மணித்தியாலங்கள் வீதம் 22 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு, அதன் மூலம் குடும்பம் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்தத் திட்டம் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குளங்களில் உள்ள தண்ணீரைப் பாதுகாப்பு காரணத்திற்காகத் திறந்து விடுகிறோம் என இராணுவத்தினர் திறந்து விட்டு விடுகின்றார்கள். இதனால், குளம் வற்றிக்கிடக்கின்றது. குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயம் செய்ய முடியாதுள்ளது. அது மட்டுமல்லாமல் குளத்தைச் சூழவுள்ள தோட்டக் கிணறுகள், வீட்டுக் கிணறுகளும் நீர் ஊற்றின்றி வற்றி கிடக்கின்றன.
இந்த நிலையில் நாங்கள் அரசாங்கம் தருகின்ற நிவாரண உணவிலேயே எமது வாழ்க்கையை ஓட்டினோம். உணவுக்கும் வாழ்வாதாரத்திற்கும் உரிய மாற்று வழி செய்யாமல் நிவாரண உணவு விநியோகத்தை அரசாங்கம் நிறுத்தியுள்ள நிலையில் நாங்கள் என்ன செய்வது?
நிவாரணம் நிறுத்தப்பட்டதனால், நாங்கள் மீள்குடியேற்ற பகுதிகளில் பட்டினிச்சாவைத்தான் எதிர்நோக்கியிருக்கின்றோம் என அந்த மக்கள் கூறுகின்றார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply