வடபகுதியில் அரசாங்கத்தின் ஆதரவில் இடம்பெரும் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு:சித்தார்த்தன்
தனிப்பட்ட ரீதியில் யாரும் வடக்கில் வசிக்கலாம். வர்த்தகங்களை நடத்தலாம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவில் குடியேற்றங்கள் இடம்பெறுவதையே எதிர்க்கின்றோம். தற்போது இராணுவத்தினர் காட்டுப்பகுதியில் முகாம்களை அமைக்கின்றனர். அது பிரச்சினையில்லை. ஆனால் பண்டிவிரிச்சானில் எதற்கு பௌத்த விகாரை? இவ்வாறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இடம்பெறுகின்றன. அதாவது வடக்கின் மக்கள் தொகையியலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு அமைவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது.
இலங்கை அரசாங்கம் விரும்பினாலும் இந்தியா அதற்கு ஒருபோதும் இணங்காது. எனவே அதிகார பரவலாக்கம் தொடர்பில் சிங்கள மக்கள் ஒருபோதும் அச்சப்படவேண்டியதில்லை. சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களை நீக்கவேண்டியது பெறும்பான்மை மக்களின் பொறுப்பாகும். அதனை அவர்களே செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஆறு உறுப்பினர்கள் ஆணைக்குழு சார்பில் கலந்துகொண்டிருந்தனர். தருமலிங்கம் சித்தார்த்தன் அங்கு தொடர்ந்து கூறியதாவது
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு முக்கியமான விடயமாகும். விசேடமாக இந்த ஆணைக்குழு கிராம்ஙகளுக்கு சென்று விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றமை முக்கியமாகும். தற்போதைய நிலைமையில் தமிழ் மக்கள் கவலையுடனேயே இருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் மக்கள் மத்தியில் இன்னும் ஒருவித சந்தேகம் நிலவுகின்றது. முக்கியமாக காணிப்பிரச்சினையை குறிப்பிடலாம்.
அதாவது தெற்கு மக்கள் வடக்குக்கு வருவதையோ வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் வன்னியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அனைத்தும் முதலில் முடிவுறவேண்டும். தற்போதைய நிலைமையில் வன்னியில் மீள்குடியமரும் மக்களுக்கு அங்கு ஒன்றும் இல்லை. உணவுப் பிரச்சினை மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. நான் கொழும்பில் குடியேறலாம். வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம். அதில் பிரச்சினையில்லை. யாரும் யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் செய்யலாம். வசிக்கலாம். ஆனால் வன்னியில் இன்னும் மீள்குடியேற்றம் முடியவில்லை என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.
சுமார் மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோது உள்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் சர்வதேச சமூகமும் ஒரு விடயத்தை கூறியிருந்தன. அதாவது இந்த மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படமாட்டார்கள் என்றும் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு மீள்குடியேற்றப்படமாட்டார்கள் என்றும் கூறினர். ஆனால் நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினேன். ஆறுமாத காலத்தில் மீள்குடியேற்றங்களை ஆரம்பிப்பதõக அவர் என்னிடம் கூறியிருந்தார்.
தனியார் காணியில் பௌத்த விஹாரை
இந்நிலையில் அகதி மக்கள் மீள்குடியேற்றப்படும் பிரதேசங்களுக்கு நான் சென்றுள்ளேன். அங்கு பல குறைபாடுகள் உள்ளன. உணவுப் பிரச்சினை வீட்டுப் பிரச்சினை மற்றும் விவசாயத்தை மேற்கொள்வதில் சிக்கல் என பல விடயங்களை கூறலாம். எந்தவொரு அரசாஙகத்தினாலும் விரைவில் வீடுகளை அமைத்துக்கொடுக்க முடியாது. எனவே சர்வதேச சமூகம் அங்கு உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படவேண்டும். இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். அதாவது முல்லைத்தீவில் வட்டுவாகல் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணியானது கூட்டுறவுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படவேண்டிய தேவை என்னவென்று எங்களுக்கு விளங்கவில்லை. இதனால் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. அப்பகுதியில் பௌத்த மக்கள் இல்லை. மேலும் இந்து மதத்துக்கும் பௌத்த மதத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன.
அத்துடன் பண்டிவிரிச்சானில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. ஆனால் அந்தக் காணியின் உரிமையாளரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.“ தற்போது இராணுவத்தினர் காட்டுப்பகுதியில் முகாம்களை அமைக்கின்றனர். அது பிரச்சினையில்லை. ஆனால் பண்டிவிரிச்சானில் எதற்கு பௌத்த விகாரை? இவ்வாறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இடம்பெறுகின்றன. அதாவது வடக்கின் மக்கள் தொகையியலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
இராணுவ முகாமுக்கு செல்லும் நிலை
மேலும் வடக்கில் அனைத்து இடங்களிலும் சிவில் நிர்வாகம் ஏற்படவேண்டியது அவசியமாகும். இராணுவத்தினர் மிகவும் ஒழுக்கமாக நடந்துகொள்கின்றனர். 1980 களில் இருந்த இராணுவம் தற்போது இல்லை.“ ஆனால் எந்த விடயத்துக்கும் மக்கள் இராணுவ முகாம்களுக்கு செல்லவேண்டியுள்ளது. அரசாங்க அதிபர் கூட இராணுவ அதிகாரியின் அலுவலகத்துக்கு செல்கிறார். பொலிஸார் இல்லை. ஒரு திருமண வீட்டை நடத்துவதற்கும் இராணுவ முகாமின் அனுமதியை கோரவேண்டியுள்ளது. ஏன் இந்த நிலைமை? இவ்வாறான விடயங்கள் மாறவேண்டும்.
ஆரம்பகாலத்தில் வன்முறையற்ற போராட்டங்கள் நசுக்கப்பட்டன. அவை வருத்தம் தரும் விடயங்களாகும். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறான காரணங்களே ஆயுதப் போராட்டத்துக்கு காரணமாகும். தற்போது ஆயுதப் போராட்டம் முடிந்துவிட்டது. இதற்கு பின்னர் ஆயுதம் போராட்டம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள். எனவே ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்றும் நாம் நம்புகின்றோம்.
13 ஆவது திருத்தம் ஆரம்பபுள்ளி
1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இறுதி தீர்வல்ல. மாறாக அதனை ஆரம்ப புள்ளியாக கொள்ளலாம். இரண்டு பிரதான கட்சிகளுமே 13 ஆவது திருத்தச் சட்டம் இறுதி தீர்வல்ல என்பதனை அவைகளின் செயற்பாட்டின் ஊடாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச இது தொடர்பி“ல் ஆராய குழுவை நியமித்திருந்தார். சர்வகட்சி மாநாட்டையும் நடத்தினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இது தொடர்பி“ல் ஆராய குழுவை நியமித்திருந்தார். புதிய யோசனையையும் முன்வைத்திருந்தார். அதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமும் சமஷ்டி தீர்வுக்கு தயார் என்று கூறியிருந்தது. தற்போதைய ஜனாதிபதியும் புலிகளுடன் பேச்சு நடத்தினார். சர்வகட்சியை கூட்டினார். அதாவது 13 ஆவது திருத்தம் இறுதி தீர்வு அல்ல என கருதினார். எனவே இறுதி தீர்வு குறித்து ஆராயவேண்டும் என்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் மக்கள் மத்தியில் சந்தேகமே நிலவுகின்றது. நாட்டில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. முக்கியமாக 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்த விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை காலமும் அரசாங்கங்கள் அரசியல் தீர்வு விடயத்தில் புலிகளை குறை கூறி வந்தன. புலிகள் எந்த தீர்வையும் ஏற்கமாட்டார்கள் என்று கூறிவந்மனர். ஆனால் இனி பிரபாகரன் இல்லை. பிரபாகரன் எந்த தீர்வையும் ஏற்றிருக்கமாட்டார் என்பதனை நானும் ஏற்கின்றேன். இது அரசியல் பிரச்சினையாகும்.
அபிவிருத்தி மட்டும் தீர்வல்ல
வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறுகின்றன. அதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றோம். ஆனால் அபிவிருத்தி மட்டுமே தீர்வு என்று தெற்கு நம்பிவிடக்கூடாது. 80 களில் 70 களில் இந்த போராட்டம் ஆரம்பமாகவில்லை. பண்டாரநாயக்க இந்த பிரச்சினை பற்றி உணர்ந்தமையினால்தான் பண்டா செல்வா உடன்படிக்கை வந்தது. டட்லி சேனாநாயக்க பிரச்சினை தொடர்பில் உணர்ந்தமையினால் தான் டட்லி செல்வா உடன்படிக்கை வந்தது.
எனவே இந்தப் பிரச்சினை எமது அடுத்த பரம்பரைக்கு செல்லக்கூடாது. நடந்தது அனைத்தும் போதுமாகும். இரு கால்களை இழந்த கைகளை இழந்த மக்களை நாம் காண்கின்றோம். அவ்வாறானவர்களுக்கு பிள்ளைகளும் உள்ளனர். யாருக்கும் ஆயுதம் போராட்டம் தேவையில்லை. எனவே பிரச்சினையை சுலபமாக தீர்க்க முடியும். சமஷ்டி ஐக்கியம் ஒற்றை என்பது பற்றி நாங்கள் பேசவில்லை. மாறாக நியாயமான அதிகரப் பரவலாக்கத்தையே நாங்கள் கோருகின்றோம். எமது அபிலாஷைகள் தீர்க்கப்படவேண்டும். நாங்கள் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். சமஷ்டி ஐக்கியம் ஒற்றை என்று பெயர் குறிப்பிட்டு எதனையும் கேட்கவில்லை.
இந்தியா இடமளிக்காது
இதேவேளை இலங்கையில் தனிநாடு அமைவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது. இலங்கை அரசாங்கம் தனிநாட்டை விரும்பினாலும் இந்தியா அதற்கு இணங்காது. எனவே அதிகார பரவலாக்கம் தொடர்பில் சிங்கள மக்கள் ஒருபோதும் அச்சப்படவேண்டியதில்லை. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களை நீக்கவேண்டியது பெறும்பான்மை மக்களின் பொறுப்பாகும். அதனை அவர்களே செய்யவேண்டும். யுத்தம் முடிந்துவிட்டது. இதற்கு பின்னர் ஆயுதப் போராட்டத்துக்கு சாத்தியமேயில்லை.
தனிப்பட்ட ரீதியில் யாரும் வடக்கில் வசிக்கலாம். வர்த்தகங்களை நடத்தலாம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவில் குடியேற்றங்கள் செய்யப்படுவதையே எதிர்க்கின்றோம். அதன்மூலம் எமது மக்கள் தொகையியல் மாற்றப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது. எமது பகுதி விடயங்கள் தெரிவு செய்யப்பட்ட மக்களாலேயே தீர்க்கப்படவேண்டும். அம்பாந்தோட்டை பகுதி விடயங்கள் அங்குள்ள மக்களால் கையாளப்படவேண்டும்.
1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஏன் தனிச் சிங்கள சட்டம் என ஒன்கொண்டுவந்தார் என்று தெரியவில்லை.“ ஆனால் அதன் பிரச்சினையை அவர் உணர்ந்தார். அதனால்தான் பண்டா செல்வா உடன்படிக்கை வந்தது. பின்னர் 1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி கொண்டு வந்த தீர்மானம் காரணமாக அவர்களுக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் அவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை ஏற்றனர். பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை வந்தது. எனினும் அந்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. 13 ஆவது திருத்தத்தை நாங்கள் ஆரம்ப புள்ளியாக கருதலாம். எனவே சிங்களம் மற்றும் தமிழ் தலைமைகள் என இரண்டு தரப்பும் தோல்விகண்டுள்ளன என்றும் கூறலாம். இந்த விடயங்களை அரசியலுக்காக அனைவரும் பயன்படுத்தினர். எனவே எமது அரசியல் இலக்கை மறந்து பிரச்சினையை முடிப்போம்.
சந்திரிகாவும் மறந்தார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேல் மாகாண சபை முதலமைச்சராக இருந்தபோது தனக்கு அதிகாரங்கள் போதாது என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியாக வந்ததும் அதனை மறந்துவிட்டார். மாவட்ட அபிவிருத்தி சபைகள் சிறிய குழுக்களாகவுள்ளன. எனவே தற்போதைக்கு அந்த முறைமை பொருந்ததாது. சிறிய அலகுகளினால் பெரிதாக சாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.
இதேவேளை யுத்தம் நடைபெற்ற காலத்தில் அதிகமான தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினர். முக்கியமாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கூறலாம். ஆனால் எமது அமைப்புக்கள் போன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களை புலிகள் பாரிய அளவில் கொலை செய்தனர். எனவே அதிகளவில் விதவைகள் உருவாகினர். அவ்வாறான விதவைகள் தற்போது வறுமையினால் வாடுகின்றனர். ஆனால் தற்போதைய நிலைமையில் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்புபட்ட விதவைகளுக்கே அரசாங்கம் உதவிகளை வழங்கிவருகின்றது. சர்வதேசமும் உதவுகின்றது. நாங்கள் அதனை வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக நாம் கூறும் வகைப்படுத்தலுக்கு உள்வரும் விதவைகளுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என்று கோருகின்றோம். ஒரு விதவை பெண்ணுக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply