தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திக்கத் தீர்மானம்
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சவார்த்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நேற்றைய தினம் ஈ.பி.டி.பி.யின் கொழும்பு அலுவலகத்தில் சந்திப்பொன்றை நடத்தியதாகவும், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் மற்றும் அரசியல் மற்றும் யுத்த கைதிகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மகஜர் தயாரிக்கப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பி., தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, சிறீ ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் போன்ற கட்சிகள் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் நேற்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply