முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது புனர்வாழ்வு முகாம்களிலேயே நீதிமன்ற விசாரணை
புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக புனர்வாழ்வு முகாம்களிலேயே நீதிமன்ற விசாரணைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப் பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறினார்.
படை வீரர்களிடம் சரணடைந்த சுமார் 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் 14 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன் சரணடைந்த முன்னாள் புலி உறுப் பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் விசேட கூட்டம் நடத்தப்பட்டது.
பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகள், நீதி அமைச்சு அதிகாரிகள், பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போன்றோர் இதில் பங்கேற்றனர்.
நீண்டகாலம் தடுத்து வைத்துள்ளவர்களின் வழக்குகளை துரிதப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. புனர்வாழ்வு முகாம்களுக்குச் சென்று அங்குள்ள முன்னாள் புலி உறுப்பினர் தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது என அவர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply