புதிய எம்.பிக்களின் பங்களிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் எதிர்கால அபிவிருத்தி க்கான திட்டங்களைத் தயாரிப் பதற்கும், அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால பொரு ளாதார அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில் ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் எதிர்கால அபிவிருத்தி க்கான திட்டங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது இவ்விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு நிதியமைச்சு செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கொள்கை அடிப்படையில் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தவும், உள்ளூர் கைத்தொழில் துறையை பாதுகாக்கவும் முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்களை இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதோடு நாடு துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது. இதன் பங்காளர்களாகத் தனியார் துறையினரை உள்வாங்குவது குறித்தும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட நேரம் கருத்துத் தெரிவித்தனர்.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் வடக்கு – கிழக்கு பிரதேசம் இன்று தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு விஷேட பங்களிப்பை வழங்கி வருகின்றது. அப்பிரதேசங்களின் விவசாய, மீன்பிடி துறைகள் மாத்திரமல்லாமல் உல்லாசப் பயணத்துறையும் துரிதமாக மேம்பாடு அடைந்திருக்கிறது. அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மேலும் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அதேநேரம் அப்பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தி மக்களின் எதிர்பார்ப்பை உச்ச அளவில் நிறைவேற்றுவதே அரசின் நோக்கம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போதைய அமைதிச் சூழலில் அரசாங்கம் அறிவை மேம்படுத்துவதற்கு கொள்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது அந்த அறிவை நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும் என்று புதிய எம்.பிக்கள் இங்கு குறிப்பிட்டனர். இவ்விடயத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, இது விடயமாக ஒழுங்கு முறையான வேலைத் திட்டம் தயாரிக்கப்படும் என்றும் கூறினார்.
இச்சந்திப்பின் போது புதிய எம்.பிக்கள் தெரிவித்த கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்நாட்டின் சுகாதாரம், கல்வித் துறைகள் மாத்திரமல்லாமல் அரச சேவையை வலுப்படுத்தல், பெண்களை வலுவூட்டல் உட்பட்ட சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சு செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply