அழகான நகரத்தை உருவாக்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கம் :கோத்தாபய ராஜபக்ஷ

சரியான நேரத்தில், சரியான தலைமைத்துவத்தை வழங்கி யுத்தத்தை வெற்றிகொண்டது போல் நகர அபிவிருத்தித் திட்டத்திலும் வெற்றி காண்போம் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.அழகான நகரத்தை உருவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். உலக நகர திட்டமிடல் தினத்தை முன்னிட்டு இலங்கை நகர திட்டமிடுவோர் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில் :- இலங்கையை ஆசியாவின் புதுமையான நகரமாக மாற்றும் ஜனாதிபதியின் நோக்கத்தை நிறைவேற்ற நகர திட்டமிடலாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். இது ஒரு பாரிய சவாலாகும்.

யுத்த வெற்றியைப் பற்றி பலர் பல்வேறு விதத்தில் கருத்து தெரிவித்தனர். எனினும் ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவமும் முறையாக வகுக்கப்பட்ட திட்டங்களும் கடப்பாடுமே இதற்கு பிரதான காரணமாகும். கடப்பாடு என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் சிறந்த இராணுவத்தினரே இருந்தனர். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்பால் வெற்றிகாண முடியாது போனது. ஜனாதிபதி பதவியேற்றதும் இந்த நாட்டின் பிரச்சினையை சரியான முறையில் அடையாளம் கண்டார். அதனை இல்லாதொழித்து சரியான தலைமைத்துவத்தை வழங்கினார். அன்று இருந்த முப்படையினரே இன்றும் இருக்கின்றனர்.

ஆனால் யுத்தத்தை வெற்றி கண்டனர். சிறந்த முறையில் நகர அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறந்த, இளம் துடிதுடிப்புள்ளவர்களை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன் பிரதிபலன் வெகுவிரைவில் சிறந்ததாக கிடைக்கும்.

நகர திட்டமிடல் யதார்த்தமாக அமைய வேண்டும். இதற்கு கூட்டு ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை மிகவும் அவசியமாகும்.

1998ல் மேற்கொண்ட மதிப்பீட்டின் போது 65 ஆயிரம் குடும்பங்கள் கொழும்பில் சேரிப்புறங்களில் வசிப்பதாக கணக்கிடப்பட்டது. இது தற்போது 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சட்டவிரோதமாக வாழும் இந்த மக்களை மீளக்குடியமர்த்த வேண்டும். சிறிய வீடமைப்பு திட்டமொன்றில் இவர்களில் ஒரு குடும்பத்தை மீளக் குடியமர்த்த குறைந்த பட்சம் 2.5 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதற்கான முழு செலவை திறைசேரி பொறுப்பேற்கவும் முடியாது.

இதற்கான பணம் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தை முன்வைத்ததும் பலர் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். மக்களுக்குத் தேவையான ஆழகான நகர், அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

கொழும்பிலுள்ள பெறுமதியான பல அரச காணிகளில் சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்து அவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு நகர திட்டமிடுவோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இலங்கை நகர திட்டமிடுவோர் நிறுவனத்தின் தலைவர் எல். டி. டிக்மன், நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் பொறியியலாளர் ஜனக குருகுலசூரிய, இலங்கை துறைமுக அதிகார சபை தலைவர் டாக்டர் பிரியந்த பந்து விக்ரம, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி இந்து ரத்னாயக்க, ஜயந்த விக்ரமரத்ன ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply