ஆங் சான் சூகி நாளை மறு நாள் விடுதலை : அரசு தகவல்

மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி நாளை மறுநாள் 13ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு இராணுவ அரசு தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும், அங்கு தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்க வேண்டும் என உலக நாடுகள் அந்நாட்டு இராணுவ அரசை வற்புறுத்தி வந்தன.

இந்நிலையில், அங்கு கடந்த 7ஆம் திகதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில், இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் ஆங் சான் சூகி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. பொதுத்தேர்தலில் இராணுவ அரசுக்கு ஆதரவான ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டுக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆங் சான் சூகி நாளை மறுநாள் 13ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஜனநாயகத்துக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் போராடி வருகின்றார்

நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுவிக்கப்பட்ட பின், நாட்டின் அரசியல் நிலை மாறுமா என்பது பற்றிக் கூற முடியாது என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்தேர்தலில் இராணுவ ஆட்சியாளர்கள், பாராளுமன்றின் இரு சபைகளிலும் 77 சதவீதத்திற்கு மேல் உள்ள இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply