தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஈ.பி.டி.பியினரும் ஜனாதியதியும் சந்திப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடை முறைப்படுத்துவது குறித்தும், சம காலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நேற்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ்வை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இச் சந்திப்பின் போது பிரதான விடயமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான யாழ் நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்ட விரோதமான முறையில் குடியேறியிருக்கும் விடயம் குறித்து ஈ.பி.டி.பி தரப்பினரால் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

எந்த மக்கள் சமூகமாக இருப்பினும் அவர்கள் விரும்பிய பிரதேசங்களில் வாழ்வதற்குரிய ஜனநாயக உரிமைக்கு தாம் மாறானவர்கள் இல்லை என்றும் ஆனாலும் இனங்களுக்கிடையிலான மனக்கசப்புகளை உருவாக்கும் வகையிலான சட்ட விரோத குடியேற்றங்கள் இன ஐக்கியத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் ஈ.பி.டி.பி தரப்பினரால் ஐனாதிபதியிடம் எடுத்து விளக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களை சிலர் திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்ததோடு ஈ.பி.டி.பி தரப்பில் இருந்து எடுத்து விளக்கப்பட்ட நியாயங்களை தான் புரிந்து கொள்வதோடு இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும், தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் சமகால பிரச்சினைகளில் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார வசதிகளை மேலும் உருவாக்கி கொடுப்பதோடு எஞ்சியுள்ள சிறுதொகை மக்களும் மீள்குடியேறுவதற்கான தடைகளை விரைவாக அகற்றி அவர்களுக்கான அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனதிபதியின் கவனத்திற்கு எடுத்து சொல்லப்பட்டிருந்தது.

கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு வரும் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்கள் குறித்து பேசப்படுகையில் எஞ்சியுள்ள பிரதேசங்களிலும் உள்ள கண்ணி வெடிகளையும் விரைவாக அகற்றி, அங்கு மக்களை மீள் குடியேற்றம் செய்வதோடு அவர்களுக்கான இயல்புவாழ்க்கையை விரைவாக உருவாக்கி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி தரப்பினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது.

அத்துடன் யாழ் பல்கலைக்ழகத்தின் அபிவிருத்தி குறித்தும், பொறியியல், மற்றும் விவசாய பீடங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய அரசின் உதவியுடன் விரைவாக ஆரம்பிப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், அரசியல் தீர்வு குறித்து, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும், சம உரிமையும் என்ற இலக்கை எட்டுவதே சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நடைமுறைக்குச் சாத்தியமானதும் என்றும் எடுத்து சொல்லப்பட்டதோடு அதற்கான அடுத்த முன்னேற்பாடாக வட மாகாண சபைக்கான தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும், அதன்பின்னர் 13 வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் யாவும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களே 13 திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவது குறித்து பகிரங்கமாக தெரிவித்து வருகையில் அதை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சென்றிருந்த ஈ.பி.டி.பி தரப்பினரால் ஜனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி கேட்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ் உடனான இச்சந்திப்பின் போது ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் தரப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றம் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவரும், யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேகச் செயலாளர் கே. தயானந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply