வன்னி மக்கள் தமது பாதுகாப்புக்காக சுயாதீனமாக வெளியேற அனுமதிக்காவிடின் புலிகள் மீது தடை : ஜனாதிபதி

வன்னிப் பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களை  புலிகள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்காவிடில் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய நேரிடலாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அப்பாவிப் பொதுமக்களை உடனடியாக விடுவித்து அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டுமெனவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வர அனுமதிக்காவிட்டால் இந்த இயக்கத்தை அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கும் என்றும் 2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றியாண்டாக இருக்கும் என்பதோடு புலிப் பயங்கரவாதம் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து துடைத்தெறியப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மதத் தலைவர்கள், அமைச்சர்கள், சிரேஸ்ட நிர்வாகிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.

தொடர்ந்து பேசிய அவர், இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்களல்லர். அது போன்றே சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களல்லர். எமது அனைத்து மக்களதும் பொது எதிரியாக பயங்கரவாதமே அமைந்துள்ளது. ஆகவே இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் இன,மத வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்தை முற்றாகத் துடைத்தெறிய ஒன்றுபட வேண்டும்.

அது போன்றே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவும் முன்வர வேண்டுமென நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கிறேன். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல சகலரும் உதவ வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply