புத்தாண்டுக்கு முன் மக்களை விடுவிக்காவிடின் புலிகள் இயக்கத்தை தடைசெய்ய நேரிடும்:சமாதானம் வெகு தூரத்தில் இல்லை – ஜனாதிபதி

புதிய வருடப்பிறப்பிற்கு முன்னர் முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அரச பாதுகாப்பிலுள்ள பகுதிக்கு வருவதற்கு புலிகள் இடமளிக்க வேண்டுமென புலிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறின்றேல் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யவும் நாட்டிலிருந்து நிரந்தரமாக அன்னியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

நத்தார் சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கும் திருநாள். பயங்கரவாதத்தை வெற்றிகொண்டு சமாதானத்தை நிலைநாட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. 2009ம் ஆண்டில் எதிர்கொள்ளப்போகும் சகல சவால்கள் தடைகளையும் வெற்றிகொள்ள கட்சி, அரசியல் உட்பட சகல பேதங்களையும் மறந்து இணைந்து செயற்பட வருமாறும் ஜனாதிபதி சகலருக்கும் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய செயற்றிட்டங்கள் சம்பந்தமாக அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சகல துறைகளையும் சார்ந்த முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த மூன்று வருட காலத்திற்கு முன்பிருந்த நமது நாட்டையும் இன்றுள்ள நிலையையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நாட்டின் எல்லை, எல்லைக் கிராமங்கள், எம்மிடமில்லாதிருந்த பகுதிகள் என பலவற்றை இதில் குறிப்பிடலாம். புலிகளோடு போரிடுவது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று என எண்ணிய காலம் இருந்தது.

புலிகளின் பொலிஸ், புலிகளின் வங்கி என்று நிறுவனங்கள் இயங்கின. கப்பம் பெற்று அதை வைப்பிலிடும் இடமாக புலிகளின் வங்கி செயற்பட்டது. அப்பாவி மக்களைக் கொல்லவும் கப்பம் பெறவுமே புலிகளின் பொலிஸ் இயங்கியது. இந்நிலையில் புலிகள் அமைப்பை ஐக்கிய நாடுகள் சபையில் அமரச் செய்வதற்கு எமது அரசியல் தலைவர்கள் பகீரத முயற்சி செய்தனர்.

நாட்டின் தலைவர் என்பவர் உண்மையானதும் சரியானதும் நோக்கத்திற்காக மக்களை வழிநடத்துபவராக இருக்க வேண்டும். நமது தலைவர்கள் அவ்வாறு செயற்படவில்லை.

இன்று நாம் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டை ஒன்றிணைத்துள்ளோம். கனவாகியிருந்த விடயத்தை எம்மால் நனவாக்க முடிந்துள்ளது. யுத்தத்தைக் காட்டி சகலவற்றிலும் பின்னடைவைக் காட்டி அபிவிருத்தியைக் கனவாக்கியிருந்த யுகம் மாறி இன்று அபிவிருத்தியின் யுகம் உருவாகியுள்ளது.

தொப்பிகலையை மீட்டு கிழக்கையும் மீட்டு அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடி யும் எனவும், கிளிநொச்சியை நெருங்கி புலி களின் முக்கிய கேந்திர நிலையங்களை அழிக்க முடியுமென யார் நினைத்தது. இன்று எம்மால் முடிந்துள்ளது. மின் துண்டிப்புக்களை நிறுத்தி பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியுமென யார் நினைத்தது. இக்கனவுகளை நனவாக்கும் திட்டங்கள் எமது பலத்தையும் செயற்பாட்டு வேகத்தையும் காட்டுகின்றன.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சகல பலத்தையும் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதே எமது நோக்கம். நாம் இதற்கான சரியான திசையில் பயணிக்கின்றோம். முழு உலகமும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நமது பயணம் தொடர்கிறது.

இதற்கான வழிகளை எமக்குக் காட்டியவர்கள் இந்நாட்டு மக்களே. இந்த வகையில் மக்களுக்கு சேவை செய்யாத தரிசனம் என்ன அரசியல் தரிசனம் என கேட்க விரும்புகின்றேன்.

துறைமுகம், விமான நிலையம், மின் உற்பத்தி நிலையங்கள் என நாடு முழுவதிலும் பாரிய அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பின்மையின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய மின் தொகுதிக்கு மேலும் மின்சாரத்தை சேர்க்க முடிந்துள்ளது. விரைவில் மட்டக்களப்பில் 1,500 பேருக்குத் தொழில் வழங்கக் கூடிய ஆடைத் தொழிற் சாலையொன்றைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டிற்கு பிரான்ஸ் அரசியல் முறையும் அமெரிக்க அரசியல் முறையும் பொருந்துமா? அதனை நடைமுறைப்படுத்த பலர் முயற்சித்தனர். நாம் மஹிந்த சிந்தனை என்ற அரசியல் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டைக்கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

பல முக்கிய நாடுகளே பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து இரண்டு வேளை மட்டும் அந்நாட்டு மக்களை சாப்பிடச் சொல்கிறது. நாம் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளோம். மூன்று வேளை சோறு வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

கடந்த மூன்று மாதத்திற்குள் எரிபொருள் விலை குறைந்துள்ளது. அன்னிய செலாவணிகள் குறைந்துள்ளன. எரிபொருள் விலையே ற்றத்தின்போது நாம் வழங்கிய எரிபொருள் நிவாரணத்தினால் பெருமளவு நட்டம் ஏற்பட்டது. இன்று அந்நிலை மாறி இறக்குமதி செலவுகள் 2000 மில்லியனாகக் குறைந்துள்ளன. இதனால் அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடிந்துள்ளது.

தற்போதுள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு விலையை நாம் தொடர்ந்து பேணுவோம். 2009ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் நாம் எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளோம். எரிபொருள் விலை மேலும் குறைவடையுமானால் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மேலும் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

இத்தகைய நிவாரணங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும்? நூற்றிற்கு நான்கு வீதமான சொகுசு கார்களில் பயணிப்பவர்களுக்கா அல்லது பஸ்களில், ரயில்களில் பயணம் செய்யும் மக்களுக்காகவா? என நான் கேட்க விரும்புகிறேன்.

நாட்டின் தற்போதைய தேவை எரிபொருள் விலையை குறைப்பது அல்ல. பொதுவான பொருளாதாரம், பொதுவான அரசியல் வருமானம் பற்றி சிந்திக்க வேண்டும். சாராயம், சிகரட், சொகுசு வாகனங்களுக்காக அறிவிடும் வரிகள் மூலமே எமது பிள்ளைகளுக்கு இலவச பாடநூல் வழங்க முடிகிறது. சமுர்த்தி, சுகாதாரம், கல்வி என பல சேவைகளையும் வழங்க முடிகிறது.

நீதியை நிலைநாட்டி இந்நாட்டு மக்களுக்கு நியாயமானதைச் செய்யவும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதுமே எமது தலையாய பொறுப்பு. அதிலிருந்து நாம் ஒருபோதும் விலகப் போவதில்லை.

நாம் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும். அழுத்தங்களுக்குப் பணிந்து தலையாட்டி பொம்மைகளாக முடியாது. பிரிவினைவாத த்தின் நிதியில் சொகுசாகி நாட்டைக் காட்டிக்கொடுக்க ஒருபோதும் முடியாது. அரசாங்கம் பாராளுமன்றம், நீதிமன்றம் ஆகியவற்றிற்குப் புரிந்துணர்வு இருக்க வேண்டும். நாம் எமது அதிகாரத்தை முறையற்றவிதத்தில் பாவிப்பதில்லை.

எமது மக்களை எமது எதிரிகள் தாக்கும் இத்தருணத்தில் நாம் விழிப்பாக இருப்பது அவசியம். இந்த நாட்டின் ஒரே எதிரி பயங்கர வாதிகளே. ஜே.வி.பி. யோ, ஐ.தே.க.வோ எமது எதிரிகள் அல்ல. எமக்குள் அரசியல் கொள்கை ரீதியில் பிரச்சினைகள் இருக்கலாம். எமது சகலரதும் பொது எதிரி பயங்கரவாதியே.

நிறைவை எட்டும் இந்த வருடத்திலும் பயங்கரவாதத்தை ஒழித்து அபிவிருத்தியை மேற்கொள்ள சகலரும் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த வருடம் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான வருடம் படையினர் இறுதிப் போரில் வெற்றிபெறும் வருடம். தாய் நாட்டைப் பயங்கரவாதத்திடமிருந்து முழுமையாக மீட்கும் வருடம்.

புலிகளைப் பாதுகாக்கவும், அரசியல் நிலையைச் சீர்குலைக்கவும் பல சக்திகள் இப்போதிருந்தே சூழ்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

சகலதையும் வெற்றிகொண்டு முன்னேறிச் செல்வதற்கு சகல அரசியல் கட்சிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஜே.வி.பி.யும் எம்மோடு ஒன்றிணைய வேண்டும். ஐ.தே.க.வில் உள்ள நாட்டை நேசிக்கும் சகலருக்கும் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

குரூரமான பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சமாதானத்தில் கட்டியெழுப்ப சகல அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித்கப்ரால் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply