மீண்டும் அழிவை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர் கைகளில் புலிக்கொடி : டக்ளஸ்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப்போபவை நல்லதாக நடக்கட்டும். நல்லவை நடக்கும் என்று நம்புகின்றேன். என இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்புத் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை வருமாறு,நான் சொல்லும் கருத்துக்கள் தனி நபர் கருத்துக்களோ, தனியொரு குழுவின் கருத்துக்களோ, அன்றி தனியொரு கட்சி சார்ந்த கருத்துக்களோ அல்ல. இவைகள் மனித குலம் சார்ந்த கருத்துக்கள். ஒரு மக்கள் சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருத்துக்கள். மனித நாகரீகத்தை விரும்பும் எந்த தரப்பாலும் ஏற்க முடிந்த கருத்துக்கள்.

நான் இங்கு பேசும் கருத்துக்கள் நீண்ட நெடிய வரலாற்று அனுபவங்களை கொண்டவை. சுமார் 15 வருட கால ஆயுதப்போராட்ட அனுபவங்களையும், 20 வருடங்களுக்கு மேலான ஜனநாயக வழி முறையிலான அனுபவங்களையும் கொண்டவை என் கருத்துக்கள். எமது மக்கள் முப்பதாண்டு காலப் போருக்குப் பின்னர் இப்போதுதான் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இப்பொழுதுதான் இந்த மக்களுக்கு ஒரு புதிய உலகத்தின் அனுபவம் கிடைத்துள்ளது.

குறிப்பாக வன்னியிலிருக்கும் இளைஞர்கள் உலக ஓட்டத்திலுள்ள பல விடயங்களை இப்பொழுதுதான் அறிகிறார்கள். ஆனால் இதற்கிடையில் இந்த நல்ல நிலைமையைப் பாழாக்குவதற்குச் சில சக்திகள் முயற்சிக்கின்றன. இது கண்டிக்கப்பட வேண்டியது. தீர்வுத்திட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு அதற்கு எதிராக பிரச்சினைகளை உருவாக்கும் இந்த நடவடிக்கைகளை யாரும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே இருந்த புலிகளின் தலைமை முள்ளிவாய்க்கால் வரையில் மக்களை அழைத்துச் சென்று மரணக்குழியில் தள்ளியதைப்போல மீண்டும் ஒரு அழிவுப் பாதையில் தள்ளிவிடுவதற்கு அதே புலிக் கொடியை ஏந்திய புலம் பெயர் தமிழர்கள் சிலர் முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவலாம். ஆனால், பாதிப்புக்களை உருவாக்குவதற்கு முயற்சிக்கக் கூடாது. மாற்றம் ஒன்று நிகழும் என்பதை தவிர இங்கு மாறாதிருப்பது எதுவுமேயில்லை. இந்த கருத்தில் நானும் என்னை போன்றவர்களும் மிக நீண்ட காலமாகவே உறுதியாக இருந்து வந்திருக்கின்றோம்.

மாற்றங்களை உருவாக்குவதற்கு நாம் கையாள வேண்டிய வழி முறை என்பது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்தும் சாணக்கிய தந்திரங்களே ஆகும். இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது எமது வரலாற்று சூழலில் பாரியதொரு மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அந்த மாற்றத்தை உணர்ந்து, அதை எமது மக்களுக்கான ஒரு அரிய வாய்ப்பாக சம்பந்தப்பட்ட தமிழ் தலைமைகள் பயன்படுத்த மறுத்ததினால் 22 வருடங்களாக இலங்கைத் தீவு இரத்தத்தீவாக மாறியிருந்தது.

இழந்த உரிமைகளை பெற வேண்டிய எமது மக்கள் இருந்த உரிமைகளையும் பறிகொடுத்து நிற்க வேண்டிய யுத்த சூழலுக்குள் எமது நாடு சிறைப்பட்டு கிடந்திருக்கின்றது. எந்தவொரு மக்கள் சமூகத்திற்கும் தேவையான அடிப்படை உரிமை என்பது உயிர்வாழ்வதற்கான உரிமை ஆகும்!

சுவர் இருந்தால் மட்டும்தான் சித்திரம் வரைய முடியும். அது போல் எமது மக்களும் உயிர்வாழ்வதற்கான உரிமை பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே நாம் அனுபவிக்க முடிந்த சகல உரிமைகளையும் அடைய முடியும். உரிமைகளை பெறுவதற்கான வழி என்பது அழிவு யுத்தமல்ல. இதை நாம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இருந்து இறுதி வரை உறுதியாக தெரிவித்து வந்திருக்கின்றோம்.

அழிவு யுத்தத்தால் எது நடக்கும் என்று நாம் தெரிவித்திருந்தோமோ அதுவே இங்கு நடந்து முடிந்திருக்கின்றது. எது நடக்கப்போகின்றது என்று நாம் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தோமோ அதுவே இங்கு நடந்து கொண்டும் இருக்கின்றது. எது நடக்கப்போகின்றது என்று நம்பிக்கை தெரிவித்திருந்தோமோ அதுவே இங்கு நடக்கவும் போகின்றது.

இப்போது எமது மக்களுக்கு அச்சம் தரும் சூழல் இல்லை. துப்பாக்கி சத்தங்கள் இல்லை. மரண ஓலங்கள் இல்லை. மனித அவலங்கள் இல்லை. இந்த மாற்றத்தை உருவாக்கி தந்திருந்த ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ்விற்கு நான் தமிழ் மக்களின் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

அழிவு யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் படைகள் மட்டுமல்ல. தமிழ் மக்களும் அளவிற்கும் அதிகமான விலையினை செலுத்தியிருக்கின்றார்கள். உயிரிழப்பு. சொத்திழப்பு. இடம்பெயர்வு.. என்று ஏகப்பட்ட இழப்புக்களை எமது மக்களும் சந்தித்திருக்கின்றார்கள்.

ஆகவே நாம் அதிக விலை செலுத்தி வாங்கிய அமைதியானதும், அச்சமற்றுதுமான இந்த சூழலை எமது அரியலுரிமைகளை நடைமுறை சாத்தியமான வழிமுறையில் நின்று பெற்றுக்கொள்வதற்கும் சரி வரப்பயன்படுத்த வேண்டும்.

முதலில் இங்கு தேவையானது எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்துதல். உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்களை மக்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றுதல். மீளக்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை உருவாக்கி கொடுத்தல்.

இவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் சொன்னது போல் கட்டம் கட்டமாக இதை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. அதற்கு பாதுகாப்பு தரப்பினரும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். இந்த செயற்பாடுகள் எமக்கு நம்பிக்கையினை வளர்த்திருக்கின்றது.

அழிவு யத்தத்தில் இருந்து மீண்டு வந்த எமது மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை இன்னமும் முழுமையாக நிறைவேற்றி கொடுத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை நோக்கி நாம் செல்லத் தயாராக வேண்டும். 13 வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தி, அதை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

13 வது திருத்தச்சட்டத்தில் உள்ளது போன்று மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை உரிய முறையில் சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 13 வது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாக கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமவுரிமையும் கூடிய அரசியல் சூழலை நாம் உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும்.

கடந்த கால அழிவு யுத்த சூழலில் வெறும் வன்முறைகளை மட்டுமே கண்டும் கேட்டும் வந்திருந்த எமது மக்கள் முழுமையான ஒரு ஜனநாயக சூழலுக்குள் வாழ்வதற்கான வழிகளை நாம் விரைவாக தேட வேண்டும். எமது மக்கள் சமூகத்தை முழுமையான ஒரு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கு அரசாங்கத்தின் முயற்சிகள் மட்டுமன்றி தமிழ் தலைமைகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. ஒரு கை மட்டும் ஓசை எழுப்ப முடியாது. இரு கைகள் இணைந்தால் மட்டுமே ஓசை வரும். அது போல் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் சகல உரிமைகளிலும் சம உரிமைபெற்றவர்களாக வாழ்வதற்கு சகல தமிழ் தலைமைகளும் தமது ஒத்துழைப்பை இனியாவது வழங்குவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

அதற்கான மன மாற்றங்கள் தெரிகின்றன. இந்த மனமாற்றங்கள் உண்மையுள்ளதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு உண்மையுள்ளதாக இருந்தால் மட்டுமே சகலரும் கடந்த கால தவறுகளை உணர்ந்திருக்கின்றார்கள் என்று அர்த்தமாகும்.

தவறு செய்யாதவன் யார் என்று கேட்டால் பிறக்காத குழந்தையும், இறந்த மனிதனும்தான் என்று மாபெரும் தத்துவமேதை சொன்ன விடயம் எனக்கு ஞாபகம் வருகின்றது. ஆகவே, துரதிஷ்டவசமாக சில தமிழ் தலைமைகள் செய்த தவறுகளுக்காக அப்பாவி தமிழ் மக்களே கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நடந்து முடிந்திருக்கின்றன.

இனியும் அந்த தவறுகள் இங்கு நடக்காது என்றே நான் நம்புகின்றேன். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்லெண்ண சமிக்கையோடு வருபவர்கள் யாராக இருப்பினும் அவர்களை வரவேற்க வேண்டும்.

அண்மையில் இலண்டனுக்கு ஜனாதிபதி அவர்கள் சென்றிருந்த போது புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சில அங்குள்ள மக்களை ஆர்பாட்டங்களை நடத்த தூண்டி விட்டிருக்கின்றன. கடந்த காலங்களைப் போல் புலம் பெயர் மக்களை உணர்ச்சி ஊட்டும் விதமாக பிரச்சாரங்கள் அங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது. அது மட்டுமல்ல, விடுவிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி அவர்களைச் சமூக வாழ்வில் இணைத்து வருகிறது.

இது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையில் ஏறக்குறைய 4000 க்கு மேற்பட்ட புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுக்குள் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றகரமான நடவடிக்கை இதுவாகும். இதேவேளை யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணியையும் மீள் குடியேற்றப்பணிகளையும் சமகாலத்தில் அரசாங்கம் செய்துள்ளது.

இதுவரையில் ஏறக்குறைய 90 வீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குள் போர் நடந்த பகுதிகளுக்குள் மீண்டும் இந்த மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதைப் புலம் பெயர்ந்த நாட்டிலுள்ள பெரும்பாலானோர் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைப் பகிரங்கமாகவே செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்னொரு தரப்பினர் திரை மறைவில் அழிவு மற்றும் நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் மக்களை அழிவுப் பாதையில் கொண்டு போகவே விரும்புகின்றனர். சகல மக்களினதும் மன உணர்வுகளை நாம் புரிந்து கொள்கின்றோம். இந்த நாட்டில் யுத்தம் நடக்கும் வரை மனித உரிமை மீறல்களும் நடந்து கொண்டே இருக்கும் என்று நான் பல தடவைகள் கூறி வந்திருக்கின்றேன்.

யுத்தம் நடக்கும் வரை மனிதப்படுகொலைகளும் நடந்து கொண்டே இருக்கும் என்று நான் இந்த நாடாளுமன்றத்தில் கூட தெரிவித்திருக்கின்றேன். இந்த நாட்டில் பல்வேறு அமைதி பேச்சு வார்த்தைகளுக்கான சந்தர்ப்பங்கள் எம்மை கடந்து போயிருக்கின்றன.

அப்போதெல்லாம் அரசியல் தீர்விற்கு உடன்பட்டு செல்லுங்கள். என்றும், அரசியல் தீர்வாக கிடைத்திருந்ததை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் புலம்பெயர் மக்கள் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை அப்போதே நடத்தியிருந்தால் இன்று இது போன்ற அவலங்களை காட்டி ஆர்ப்பாட்;டம் நடத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இப்போது வந்திருக்காது�

நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சொன்னவை இன்று நிஜமாகி வருகின்றன. நாங்கள் சொன்னதையெல்லாம் அன்று நம்பிக்கையீனமாகப் பார்த்தவர்களும் கேலிபேசியவர்களும் இன்று உண்மைகளைப் புரிந்துள்ளனர்.

ஆனால் இவர்களால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அண்மையில் வலி வடக்கின் குடியேற்றம்பற்றி நாம் சொல்லி வந்ததைச் சில தமிழ் ஊடகங்கள் கேலியாக வெளிப்படுத்தியிருந்தன. ஆனால், இப்போது நடந்தது என்ன?

நாங்கள் மக்களை ஒரு நிஜமான உலகத்தின் வழியாகவே அழைத்துச் செல்கிறோம். அவர்களுக்கு பொய்யான கற்பனைகளையும் வாக்குறுதிகளையும் கொடுக்க முடியாது. இதைத்தான் நாம் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறேன். நடக்காது என்று நடந்தவை எல்லாம் இன்று நடந்து வருகின்றன. இனி நடக்க வேண்டியவையும் நடக்கும்.

நாங்கள் சரியாகச் சிந்;திக்கிறோம். அந்தச் சிந்தனைக்கு ஏற்றமாதிரித் திட்டமிடுகிறோம். அந்தத் திட்டத்தின்படி நடவடிக்கைகளைச் செய்கிறோம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பது பழமொழி! இதுதான் உண்மையும் கூட..

இலங்கை இந்திய ஒப்பந்தம் பிரேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை சந்திரிகா புலிகள் பேச்சு வார்த்தை ரணில் புலிகள் பேச்சுவார்த்தை இறுதியாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ் புலிகள் பேச்சு வார்த்தை இவ்வாறு சகல சந்தர்ப்பங்களின் போதும் யுத்தத்தின் மூலம் உரிமையை வென்றெடுப்போம் என்று தெரிவித்தே பேச்சு வார்த்தைகளை புலிகளின் தலைமை முறித்துக்கொண்டு சென்றிருந்தது. இதற்கு அன்றைய பல தமிழ்த் தலைவர்கள் ஆதரித்து வந்தனர்.

அப்போது இது குறித்து நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். ஆனாலும் துரதிஷ்ட வசமாக புலம்பெயர் தமிழ் மக்கள் அவைகளை கண்டும் காணாமல் விட்டு விட்டனர். தவறுகள் நடந்தால் குற்றங்கள் இருப்பின் அவை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதன் உண்மைத்தன்மைகள் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப்போபவை நல்லதாக நடக்கட்டும். நல்லவை நடக்கும் என்று நம்புகின்றேன். என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply