தமிழ் கட்சிகளின் அரங்கம் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று கொழும்பில் சந்திப்பு
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றையதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டன. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் முகமாக அமைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி இடம்பெற்ற தமது முதலாவது சந்திப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதுதொடர்பாக அழைப்பினை விடுத்திருந்தன. இந்த நிலையில் அவ்வழைப்பினை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அழைப்பிற்கிணங்க கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.
இரு அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குகொண்ட நிலையில் இன்றைய சந்திப்பானது ஆக்கபூர்வமாக இடம்பெற்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் கலந்துரையாடப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஒரு குழுவினை எதிர்வரும் திங்கட்கிழமை (13) அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இன்றையதினம் மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை இடம்பெற்ற இம்முதல் சந்திப்பானது மிகவும் சிநேக பூர்வமானதாகவும் அடுத்தகட்ட சந்திப்புக்களுக்கான ஓர் ஆரம்பமாகவும் அமைந்தமை குறித்து பங்குகொண்ட கட்சித் தலைவர்கள் தமது திருப்தியை வெளியிட்டனர்.
இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் அப்பாத்துரை விநாயகமூர்த்தி சிவசக்தி ஆனந்தன் பா.அரியநேத்திரன் எம்.சுமந்திரன் பொன்.செல்வராசா எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் செ.சந்திரஹாசன் அ.இராசமாணிக்கம் ரி.சிறிதரன் ப.உதயராசா ஜீ.சுரேந்திரன் கோபாலகிருஷ்ணன் ஆர்.ராகவன் எஸ்.சதானந்தம் டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply