ததே.கூட்டமைப்பு எம்.பிக்கள்-மூதுர் மக்கள் சந்திப்பு
திருகோணமலைக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு இடம் பெயர்ந்து பல வருடங்களாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படாதிருக்கின்ற மக்களை சந்தித்துக் கலந் துரையாடியுள்ளனர்.மூதூர் தெற்கு, மூதூர் கிழக்குப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும், கிளிவெட்டி,பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து சுமார் ஐந்து வருடகாலமாக சொந்த குடிமனைகளில் குடியமர்த்தப்படாதுள்ள மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.
மக்கள் தமது சொந்த மண்ணில் குடியேற விரும்புவதையும், தமது வாக்குப்பதிவுகள் சொந்த முகவரிகளிலேயே பதியப்பட வேண்டுமெனவும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியதாகவும் மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரி சங்கத் தலைவர் கு. நாகேஸ்வரன் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தமது பிரச்சனைகளை வெளிக்கொணர முடிகின்ற போதிலும் தமக்கு உறுதியான தீர்வு கிட்டுமென முழுமையாக திருப்தியடைய முடியாதுள்ளதாகவும் நாகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்துக்குத் தேவையான நிலப்பகுதித் தவிர ஏனைய பகுதிகள் மக்கள் மீளக்குடியரப் போதுமானவை என்பதால், அந்தப் பிரதேசத்து மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளிலேயே குடியமர்த்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
எந்தக் காரணத்துக்காகவும் மக்கள் அவர்களின் சொந்தக் குடிமனைகளை விட்டு வெளியேற்றப்படக் கூடாது எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply