தென்னை மரங்களை தறிக்க அரசாங்கம் உடனடித் தடை
தென்னை மரங்களை தறிப்பதற்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இனிமேல் தென்னை மரங்களை எவராவது தறிப்பதாயின் தெங்கு பயிர்ச் செய்கை சபையின் முன் அனுமதியைப் பெறுவது அவசியம் எனவும் அரசாங்கம் நேற்று அறிவித்தது.தென்னை மரங்களைத் தறிப்பதைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்துவரும் சில தினங்களுக்குள் வெளியிடப்படும் என்று தெங்கு அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்ப குமார நேற்றுத் தெரிவித்தார்.
இதேவேளை நாடெங்கிலும் 40 லட்சம் தென்னங்கன்றுகளை ஜனவரி முதல் நடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் மஹிந்த சிந்தனையின் அடிப் படையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட் டுப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான விஷேட செய்தி யாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில் தென்னைகளுக்கு ஏற்பட்ட வெலிகம நோயின் காரணமாக மூன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் தென்னை மரங்கள் எவ்விதமான முன் திட்டமிடலின்றி தறிக்கப்படுகின்றன. அத்தோடு தென்னைகளுக்கு உரிய கால வேளையில் பசளையிடப் படாமையும் பெரும் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. கடந்த இரு மாதங்கள் தொடராகப் பெய்த மழையால் தேங்காய் உற்பத்தியில் 20 சதவீழ்ச்சி ஏற்பட்டது.
இவ்வாறான காரணங்களால் தான் சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இத் தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு குருநாகல் மற்றும் சிலாபம் பெருந்தோட்டக் கம்பனிகளின் ஊடாக சிறியளவிலான தெங்கு உற்பத்தியாளர்களின் தேங்காய்களை கொள்வனவு செய்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் லக்சதோச ஊடாக முப்பது ரூபாபடி சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இத் திட்டத்தின் கீழ் குருநாகல் களஞ்சியசாலையில் பத்து லட்சம் தேங்காய்கள் களஞ்சியப் படுத்தப்படும். அதேவேளை தென்னை வளர்ப்பு திட்டம் ஜனவரி முதல் விரிவான அடிப்படையில் நாடெங்கிலும் முன்னெடு க்கப்படவிருக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் தென்னை பயிர்ச்செய்கை சபை ஊடாக தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
அந்த வகையில் சமுர்த்தி நிவாரண உதவி பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐந்து தென்னங்கன்றுகள் படியும், பாதுகாப்பு படையினரின் குடும்பங்களும் தலா ஐந்து தென்னங்கன்றுகள் படியும், பாடசாலை மாணவர்களுக்கு தலா நான்கு தென்னங்கன்றுகள் படியும், பாதுகாப்பு படையினரின் குடும்பங்களுக்கு தலா ஐந்து தென்னங்கன்றுகள் படியும், பாடசாலை மாணவர்களுக்கு தலா நான்கு தென்னங்கன்றுகள் படியும் விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ‘பாடசாலைகள் ஊடாகவும் தென்னை பயிரிடல் நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றோம் என்றார்.
அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்தனவிடம் எமது செய்தியாளர் வினவியபோது, தென்னை மரங்களை தறிப்பதைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் 1971ம் ஆண்டின் 46ம் இலக்கத் தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்படும். இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் தென்னை மரங்களைத் தறிப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply