புலிகளின் பிரச்சாரங்களை முறியடிக்க புலம்பெயர் இலங்கையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : நிமால்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு புலம்பெயர் இலங்கையர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் நாட்டுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை விட்டு வெளியே வாழ்ந்து வந்தாலும், தாய்நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை சகலருக்கும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்லாயிரக் கணக்கான நண்பர்களும், உறவினர்களும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மெல்பர்ன் நகரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைய தளமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு தொடர்பான சரியான விளக்கத்தை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இணைய தளங்களின் மூலம் உலக நாடுகளுக்கு இலங்கை பற்றிய சரியான தெளிவினை அளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் நாட்டுக்கு எதிரான வகையிலான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகார மோகம் கொண்ட இந்த அரசியல்வாதிகள் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்க வழிகோலும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான இணைய தளங்களின் மூலம் நாட்டின் அபிவிருத்தியையும், சுற்றுலாத்துறையையும் உலகிற்கு தெரியப்படுத்த உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply