குடாநாட்டில் தொடரும் கொள்ளை கொலை சம்பவங்களால் பெரும் அச்சம் . சிறிரெலோ
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற கொள்ளை,கொலை போன்ற நடவடிக்கைகள் குடாநாட்டு மக்களை மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளன என்று சிறிரெலோ அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கடந்த 30 வருட கொடூர யுத்தத்திற்குள் சிக்குண்டு துன்பப்பட்டு துயரப்பட்டு உறவுகளை இழந்து நாதியற்று இருந்த எம் மக்கள் ஒரளவு நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்ந்து வருகின்ற இக்காலகட்டத்தில் பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மிதித்தது போல மீண்டும் எம் மக்கள் மீது எம்மவர்களாலேயே வேண்டப்படாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை எம்மக்களுக்கு பேரிடியாக இருக்கின்றது.
எமது இனத்தின் கலை,கலாசாரம்,கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றினை அடியோடு அழிப்பதற்கும் எம் இனத்தின் இருப்பிற்கான சுவடுகளை இல்லாது ஒழிப்பதற்கும் ஒரு சில புல்லுருவிகள் தலை தூக்கி இருப்பது வருத்தத்திற்குரியதே. கடந்த காலங்களில் தம்மையே எம்மினத்தின் வேலிகள் என்றும் காவலர்கள் என்றும் கூறியோர் இன்று வேலியே பயிரை மேயவதனைப்போல் செயற்படுகின்றார்கள்.
கொள்ளை,கொலை இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தினையும் யாழ். குடாநாட்டு மக்களுக்கு திணிப்பதற்கு எம்மவர்களே உடந்தையாக இருப்பது அவமானத்திற்கு உரியதாகும். இதுபோன்ற கீழ்த்தரமான செய்ற்பாடுகளை தமிழ் மக்களின் நலன் பேணும் கட்சி என்ற வகையில் சிறிரெலோ கட்சி எதிர்ப்பதோடு வன்மயாகக் கண்டிக்கின்றது.
இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் இவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவி புரிகின்றவர்கள் தாம் தங்கி வாழ்கின்ற சமூகத்திற்கு கேடு விளைவிக்காது திருந்த வலியுறுத்துகிறோம். நல்லதோர் சமுதாயத்தினை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் முன்னாலும் இருப்பதனால் மேற்படி குற்ற்ச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய அடையாளங்கள் மற்றும் அவர்கள் பற்றிய இரகசியத் தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்ற்கு அறியத் தாருங்கள். உங்கள் ஓவ்வொருவருடய பாதுகாப்பையும் நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இதே வேளை இப்பிரச்சினை தொடர்பாகவும் வவுனியா நகரில் இடம்பெற்ற சீட்டு மோசடி தொடர்பாகவும் சிறிரெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசா பொலிஸ்மா அதிபரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். இதன் போது இப்பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply