தோழர் கண்ணன் காலமானார்
கரவெட்டியில் 25.12.1964 ல் பிறந்த “தோழர் கண்ணன” என்றழைக்கப்பட்ட சுகுணன் பொன்னம்பலம் அவர்கள் லண்டனில் கடந்த 28.12.2010 யன்று காலமானார்.
கடும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் கண்ணன் அவர்கள் மருத்துவ சிக்சை எதுவும் பயனற்ற நிலையில் மரணத்தை தழுவினார் என்ற செய்தி அவருடைய குடும்பத்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பெரும் இழப்பையும் கவலையையும் கொடுத்துள்ளது.
தோழர் கண்ணன் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் கல்வி கற்றவர். கல்வி கற்கும் காலத்திலேயே தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் இயக்கத்தில் சேர்ந்து அதன் முன்னனிச் செயற்பாட்டாளராக இருந்தவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக உழைத்தவர்.
தோழர் கண்ணன் பேரவைத் தோழர்களுடன் மட்டுமல்ல மாற்று இயக்க உறுப்பினர்களுடன் நெருங்கிய நட்பைப் பேணியவர். தோழர்கள்; சண்முகதாசன் டானியல் இக்பால் சின்னத்தம்பி போன்றவர்களிடமிருந்து தனது மாக்சிய அறிவை வளர்த்துக் கொண்டவர். தோழர்கள் சிவம் ரத்தினம் சிவராசா போன்றவர்களுடன் புரட்சிகரப் பணிகள் புரிந்தவர். இந்தியாவில் நக்சலைட் தோழர்களான புலவர் கலியபெருமாள் தமிழரசன் சுந்தரம் போன்றவர்களுடன் மாக்சிய உரையாடல்களை மேற்கொண்டதுடன் அவர்களுடைய புரட்சிகர நடவடிக்கைகளுக்கு தன்னால் இயன்ற பங்களிப்புகளை வழங்கியவர்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித மாற்றத்திற்கும் இடங்கொடாது இறுதிவரை உறுதியாக இருந்தவர். அவர் எப்போதும் மக்களை நேசித்தார். தன்னுடைய இறுதி நாட்களில்கூட கரவை இளைஞர் ஒன்றியத்திற்காக பாடுபட்டிருக்கிறார் என்ற செய்தி அறியும்போது இத்தகைய சமூக அக்கறையாளன் தன்னுடைய உடல் நலத்திலும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் இவ்வளவு விரைவாக மரணத்தை தழுவியைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணத்தூண்டுகிறது.
தோழர் கண்ணன் அவர்களின் புரட்சிகர பங்களிப்புகளை என்றும் நினைவு கூர்வோம். அவர் நினைவாக தொடர்ந்தும் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம். இதுவே புரட்சிக்காக உழைத்த கண்ணன் போன்ற தோழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
இப்படிக்கு
தோழர்.பாலன்
லண்டன்
30.12.2010
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply