விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்துள்ளது

வடக்கே மாங்குளத்திற்குக் கிழக்கே அம்பகாமம் பகுதியில் விடுதலைப் புலிகளின் 350 மீட்டர் நீளமுள்ள மேலும் ஒரு விமான ஓடுபாதையை இராணுவத்தினர் புதன்கிழமை காலை முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

இதனிடையில், பரந்தன் மற்றும் முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது நான்கு தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் பரந்தன் சந்திக்கருகில் உள்ள கத்தோலிக்கர்களின் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் மீதும். அதற்கருகில் இருந்த தேவாலயம் ஒன்றின் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிததிருக்கின்றனர்.

அத்துடன் பரந்தனுக்கு மேற்குப்புறத்தில் உள்ள குஞ்சுப் பரந்தன் முன்னரங்க பகுதிகளில் இனறு காலை 4 மணியிலிருந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இந்த சேதங்கள் குறித்து இராணுவ தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் விடுதலைப் புலிகளுடன் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 4 விடுதலைப் புலிகள் கொலலப்பட்டுள்ளதாகவும், படையினர்; தொடர்ந்தும் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, பரந்தனுக்கு மேற்கே சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சின்னப்பரந்தன் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும், இதன்போது, விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் 20 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 5 சடலங்களையும் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை,வவுனியா மணிபுரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வெடிப்புக்கு இலக்கான சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிப்பாய்கள் இருவரும் சிவிலியன்கள் இருவரும் இதில் காயமடைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply