வடக்கு கொள்ளைச் சம்பவங்கள்: குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துக : செல்வம்

வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலை கொள்ளை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களை வெளிக்கொண்டு வருவதுடன் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். இல்லையேல் இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையேற்படுமென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலை கொள்ளை கடத்தல் சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் தோற்றுவித்துள்ளது. பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஒருவர் உட்பட இந்து மதகுரு ஒருவர் அவரது இரு மகன்மார் ஆகியோர் ஆயுதபாணிகளால் இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவுநேரக் கொலை கொள்ளைச் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை விட கடத்தல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றது. இதன் சூத்திரதாரிகள் யார் என்று தெரிந்தும் பொதுமக்கள் அச்சம் பயபீதி காரணமாக உண்மையை வெளிக்கொண்டுவர அச்சப்படுகின்றனர்.

யாழ்.குடாநாட்டில் கடந்த இரு மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இச்சம்பவங்கள் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் தற்போது இடம்பெறத் தொடங்கியுள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு முழுமையாக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறான நிலையில் தொடரும் கொலை கொள்ளை கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி. என்பன பாராளுமன்றத்தில் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

எனவே இனிமேலும் தாமதிக்காது அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுப்பதுடன் இச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை வெளிக் கொண்டு வரவேண்டும்.

இதேநேரம் கடந்த மூன்று தசாப்தகால யுத்த நடவடிக்கைகளால் பேரினவாத ஒடுக்குமுறையால் பேரழிவுகளை எதிர்கொண்ட எமது மக்களை அச்சம் பயபீதி என்பவற்றிலிருந்து விடுவித்து நிரந்தரமான அரசியல் தீர்வுடன் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமது கடந்தகால கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply