கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ முன் வாருங்கள்

கிழக்கு மாகாணத்தில் தொடரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக அங்குள்ள மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். நீடித்து வரும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட, மக்கள் எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர்.யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து கிழக்கு மாகாணம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்ற வேளையில்; இருந்தது, தேடியது என எல்லாவற்றையும் ஒரு கணப் பொழுதில் வெள்ளம் காவு கொண்டு விட்டமை வேதனையிலும் வேதனை.
இயற்கையின் சீற்றம் கிழக்கு மாகாணத்தை அடிக்கடி பழிவாங்கிக் கொள்கின்றது. கிழக்கு மாகாண மக்களின் இந்நீண்ட துயரம் நின்று போக இறைவனைப் பிரார்த்திக்கும் அதேநேரம், கடும் மழை – வெள்ளப் பெருக்கினால் பாதிப்படைந்துள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை வழங்க அனைவரும் முன்வர வேண்டும்.
யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிப்படைந்தவர்கள் வடக்கு மாகாண மக்கள். எங்களிடம் ஏராளமான துன்பங்கள், துயரங்கள் இருந்தும், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்ற வள்ளுவனின் அறக் கருத்து எங்கள் பண்பாட்டுடைமை என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களின் இழப்புகளில் நாமும் பங்கேற்போம். இது விடயத்தில் வடபுலத்தில் இருக்கக் கூடிய பொது நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், சமய ஸ்தாபனங்கள், தனிப்பட்டவர்கள், பரோபகாரிகள் எனப் பலரும் இணைந்து உதவித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
வெள்ளத்தால் எல்லாவற்றையும் இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள கிழக்கு மாகாண மக்களுக்கான உதவிகளைக் கால தாமதமின்றி உடனடியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் தார்மீகப் பொறுப்பு இங்குள்ள சமய, சமூக, பொது அமைப்புகளுக்கு உண்டு. அதேநேரம் வழங்கப்படும் உதவிகள் பாதிப்படைந்த மக்களுக்கு நேரடியாகக் கிடைப்பதற்கும் அந்த உதவிகள் அவர்களின் உடனடித் தேவைகளை ஈடு செய்வதாகவும் இருக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து.
எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவா! வெள்ளத்தால் பாதிப்டைந்த மக்களின் துன்ப துயரங்களை நீக்க உன் திருவருளைப் பாலித்தருளும்.
இயற்கையாகிய உன் சீற்றத்தைத் தணித்து அருளும். யுத்தமென்ற கொடூரத்தால் நொந்து போன மக்களைத் தொடர்ந்து சோதித்தால், அவர்கள் ஆறுதலடைவது எங்ஙனம்?
இறைவா! உதவுக.

நன்றி வலம்புரி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply