25 வருட மன்றாட்டத்துக்கு சாதகமான சமிக்ஞை இல்லை: மன்னார் ஆயர்
இலங்கையில் சமாதானம் ஏற்படவேண்டுமென கடந்த 25 வருடங்களாக சர்வதேச சமூகங்களிடம் விடுத்த மன்றாட்டங்கள் குறித்து சாதகமான சமிக்ஞைகள் எதுவும் தென்படவில்லையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கூறினார்.
மன்னார் செபஸ்ரியான் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு நடந்த திருப்பலி ஆராதனையின் பின்னர் ஆற்றிய மறைஉரையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மேற்கண்டவாறு கூறினார்.
வன்னியில் குறுகிய வட்டத்துக்குள் இடம்பெயர்ந்திருக்கும் 300,000 மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை எதிர்கொண்டிருப்பதாகவும், அவர்கள் மீது தொடர்ச்சியான எறிகணைகளும், விமானக் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருவதாகவும் ஆயர் கூறினார்.
கொடிய யுத்தங்களில் ஈடுபட்ட பல்வேறு நாடுகள் நத்தார் புனித காலத்தில் யுத்தங்களைத் தளர்த்தியிருந்த வரலாறுகள் இருக்கின்றபோதும், நத்தாரை முன்னிட்டு போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு தான் உள்ளிட்ட 5 ஆயர்கள் இணைந்து விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது தமக்குக் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் 300,000 பேரில், மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்ற 40,000 பேரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்த மன்னார் மறைமாவட்ட ஆயர், வன்னியிலிருக்கும் மக்கள் தம்மை வாழவிடுமாறு அழுது புலம்பி மன்றாடி வருவதாகக் கூறினார்.
வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நின்மதி வேண்டி இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் செபஸ்ரியன் தேவாலயத்தில் விசேட பிரார்த்தனை நிகழ்வு நடைபெறவிருப்பதாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தனது மறை உரையில் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply