வெள்ளத்தால் கிழக்கில் பேரவலம் தேர்தலைப் பின்தள்ளக் கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளதால், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைப் பிற்போடுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கவை இன்று சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை அவரிடம் வலியுறுத்த உள்ளது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணையாளரை அவரது செயலகத்தில் இன்று சந்தித்து மேற்படி வேண்டு கோளைக் கூட்டமைப்பு விடுக்கவுள்ளது என அவர் மேலும் கூறினார். இந்தச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக மாவைசேனாதிராஜா மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாகக் கிழக்கு மாகாண மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். போக்குவரத்து, மின்சாரம் என்பன துண்டிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களை நாங்களும் நேரில் சென்று பார்வையிட முடியாதஅளவுக்கு வெள்ள நீரினால் கிழக்கு மாகாணம் சூழ்ந்திருக்கின்றது.
மக்கள் தற்காலிக முகாம்களிலும்,வேறு தலங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால் மக்கள் வாக்களிக்கமுடியாத நிலைமை ஏற்படும். இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைப் பிற்போடுமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கவுள்ளோம். என்றார். இதேவேளை, வாக்காளர் இடாப்பில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமை, இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் வடக்கு மக்களின் வாக்காளர் பதிவு நடவடிக்கையில் காணப்படும் குளறுபடிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply