சரத் பொன்சேகாவின் கட்சியை பதிவு செய்வதற்கு தேர்தல் செயலகம் மறுப்பு
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு கட்சியை பதிவு செய்வதனை தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது. கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத காரணத்தினால் கட்சியை பதிவு செய்யும் சாத்தியம் கிடையாது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.புதிய சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வது சிரமமானது என தேர்தல் செயலகத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய பல கட்சிகளின் பதிவு நடவடிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக் கிண்ண சினத்தின் கீழ் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் சரத் பொன்சேகா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தேர்தல் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
செயற்பாட்டு அரசியலில் களமிறங்கு ஓரு வருடம் கூட பூர்த்தியாகாத நிலையில் எவ்வாறு கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும், தமது கட்சிக்கு ஏற்பட்ட இழப்பிற்கு அவர் நட்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சியின் பதிவினையும் தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவராக என்.ஸ்ரீகாந்தாவும், பொதுச் செயலாளராக எம்.கே. சிவாஜிலிங்கமும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமது கட்சியைப் போன்ற கட்சிகளினால் புதிய சட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply