ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தனிப்பட்டது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவ்வாறு தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு செல்லும்போது ஜனாதிபதி வேண்டுமானால் அவரின் செயலாளரை அழைத்துச் செல்ல முடியும்.ஏனையவை தொடர்பில் என்னால் பதில் கூற முடியாது என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் சுற்றாடல் இயற்கைவள அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நாட்டில் பொருட்களின் விலைகள் உயருமிடத்து அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டியது அவசியமாகும். அதனடிப்படையிலேயே இராணுவத்தினரின் மரக்கறி விற்பனை செய்யும் நிகழ்வு அமைந்துள்ளது. அதனை ஏன் தவறாக பார்க்கவேண்டும்? என்றும் பதில் அமைச்சரவை பேச்சாளர் கேள்வியெழுப்பினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்ட விடயங்களை கூறினார்.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது தனிப்பட்ட விஜயமாகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஜனாதிபதியின் விஜயம் குறித்து விளக்க முடியுமா?

பதில்: ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அதாவது இது முற்றுமுழுதுமாக தனிப்பட்ட விஜயம். ஏனையவை தொடர்பில் என்னால் பதில் கூற முடியாது.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்தால் ஏன் ஜனாதிபதி செயலாளரை அழைத்துச் செல்லவேண்டும்?

பதில்: ஜனாதிபதி தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு செல்லும்போது ஜனாதிபதியின் செயலாளரை வேண்டுமானால் அழைத்துச் செல்ல முடியும்.

அதனடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் அவரின் செயலாளரும் அமெரிக்கா சென்றுள்ளார். பொதுவாக ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும்போது அவரின் செயலாளரும் செல்வார். கடந்த காலங்களில் அவ்வாறு இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் தனிப்பட்ட விஜயம் ஒன்றை அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் செயலாளரும் சென்றுள்ளார்.

கேள்வி: மரக்கறி விற்பனையில் இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதே? அதாவது மீன்களின் விலை உயர்ந்தால் கடற்படையைக் கொண்டு மீன்பிடிக்கப்படுமா? என்றும் எதிர்க்கட்சி பிரதிநிதி கேள்வியெழுப்பியுள்ளாரே?

பதில்: பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா எதிர்க்கட்சியின் தேøவையை நிறைவேற்றி வருகின்றார்.

அதாவது மரக்கறிகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு இராணுவத்தினர் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஏன் தவறாக பார்க்கவேண்டும்?

எதிர்பாரா விதமான அதிக மழை மற்றும் பல்வேறு காரணங்களினால் மரக்கறி செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பகாலத்தில் இவ்வாறு மரக்கறி உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யக்கூடிய பல நிறுவனங்கள் இருந்தன.

ஆனால் அவ்வாறான நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தினால் மூடப்பட்டன. அதனால் இன்று குறைந்த விலையில் பொருட்களை பெறுவதற்கான நிறுவனங்கள் குறைவாக உள்ளன. ச.தொ.ச. வை மீண்டும் திறந்து வருகின்றோம்.

தனியார் துறையினரால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும்போது அரசாங்கம் தலையிட்டு விலைகளை கட்டுப்படுத்தவேண்டியது அவசியமாகும். இலங்கை போன்ற சிறிய நாடு ஒன்றில் இது முக்கியமாகும். இவ்வாறு அரசாங்கத்தின் தலையீடு அவசியம் உள்ளது.

ஹர்ஷ டி. சில்வாவின் பொருளாதார கொள்கையை நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் அவர் அரசியலிலோ மற்றும் நாட்டை நிர்வகிப்பதிலோ அனுபவமற்றவர்.

பொருளாதாரம் என்பது காலத்துக்கு ஏற்பவும் பூகோளவியல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்பவும் மாற்றமடைந்து வரும் விடயமாகும் என்பதனை நாம் உணரவேண்டும். அதற்கேற்ற வகையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply