இந்திய விமானப்படை உயரதிகாரிகள் யாழ் விஜயம் ; பாதுகாப்பு சோதனைகள் அதிகரிப்பு

இந்தியாவின் விமானப்படை உயரதிகாரிகள் இருவர் நேற்றைய தினம் யாழ். குடாநாட்டிற்கு பயணமொன்றை மேற்கொண்டு பலாலி விமான நிலையத்தில் இலங்கை படைத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர். இதன்பின்னர் வரணி படைத்தளத்திற்குச் சென்று இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு கொழும்பு சென்றுள்ளதாக புலிகள் ஆதரவு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் நடத்தப்பட்டும் திடீர் சோதனைகளால் நகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது யாழ் செய்தியாளர் அறியத்தருகிறார். காலை முதல் யாழ் நகரப் பகுதிக்குள் நுழையும் அனைத்து வீதிகளிலும் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து திடீர் சோதனைகளை நடத்தினர்.

குறிப்பாக நாவலர் சந்தி, ஓட்டுமடம் சந்தி, முத்திரைச்சந்தி, தண்ணீர் தாங்கியடி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்களை வழிமறிக்கும் இராணுவத்தினர் தீவிர சோதனைகளை நடத்தி வருவதாகவும், இதனால் நீண்டவரிசையில் பொதுமக்கள் காத்துநிற்கவேண்டிய சூழ்நிலை தோன்றியிருப்பதாகவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply