ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அமெரிக்காவின் கடமை
“இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் போர்க் குற்றங்கள் அனைத்தும் சட்டத்திற்கு முரணானவை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அமெரிக்க அரசாங்கத்தின் கடமையாகும். மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமாயின் உயிர்களை பணயம் வைத்து போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
புலிகள் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையோ அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையோ ஏன் சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை எனவும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் கூறுகையில்,
குற்றச்சாட்டுக்களை எல்லோராலும் முன்வைக்க முடியும். ஆனால் அதன் உண்மை தன்மையும், சாட்சியங்களுமே முக்கியமானவையாகும். எனவே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான குறிப்பிட்ட சில நாடுகள் முன்வைக்கும் போர்க் குற்றங்களானது உண்மைக்கு புறம்பானதும் சட்டத்திற்கு முரணானதுமாகும். முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதங்கள் காணப்படும்போது அதனை இல்லாதொழிக்கும் உரிமை அந்நாட்டு அரச தலைவருக்கே உண்டு. இதுவே சர்வதேச சட்டமும் ஆகும்.
அவ்வாறாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளை இல்லாதொழித்தமை எவ்வாறு மனித உரிமை மீறலாகவோ போர் குற்றமாகவோ கருத முடியும். எனவே வேறு ஒரு உள்நோக்கத்திற்காகவே சர்வதேசம் இலங்கை மீது வீண் பழிகளை சுமத்தி வருகின்றது.
எனவே, குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிய வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு கிடையாது. அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டு அரசாங்கத்தின் கடமையாகும். மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துபவர்களை அந்த அந்த நாட்டு அரசாங்கங்கள் கைது செய்ய வேண்டும் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply