வைகோ, கண்ணப்பனை தொடர்ந்து சீமான், அமீரும் கைது; பாரதிராஜா, சேரனும் அடுத்து?

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் வன் முறையையும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை இன்று போலீஸார் அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்தனர்.

இலங்கையில் இந்திய தலையீட்டை வலியுறுத்தி திரைப்பட கலை- ஞர்கள் சார்பில் கடந்த 19-ந் தேதி ராமேஸ்வரத்தில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான், சேரன், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அதன் தலைவர் பிரபாகரனைப் ஆதரித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அறிக்கை விடுத்தனர்.

மேலும் இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இன்று மாலைக்குள் இவர்கள் கைது செய்யப்படாவிட்டால் சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்பு 3 பேரின் உருவப் பொம்மைகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் திரண்டு எரிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சீமான், அமீர், சேரன் மற்றும் பாரதிராஜா ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து இன்று மாலை இருவரது வீடுகளுக்கும் சென்ற போலீஸ் படை அவர்களைக் கைது செய்தது. சீமானும், அமீரும் போலீஸார் தங்களைக் கைது செய்வதற்கு வசதியாக வீடுகளில் காத்திருந்தனர்.

இருவர் மீதும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதே குற்றச்சாட்டுக்களின் பேரில்தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரை ஏற்கெனவே கைது செய்துள்ளது போலீஸ்.

கைதுக்கு முன்னதாக போலீஸ் நடவடிக்கை குறித்து இயக்குநர் சீமான் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக என்னையும் தம்பி அமீரையும் கைது செய்ய வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து போலீசார் எனக்குத் தகவலும் கூறியுள்ளனர். அவர்கள் இப்போது என்னைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.

பாரதிராஜா மற்றும் சேரனையும் விரைவில் போலீசார் கைது செய்யக்கூடும் எனத் தெரிகிறது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply