குமரன் பத்மநாதன் புதிய அரசியல் கட்சியொன்றை அமைக்கத் திட்டம்?

குமரன் பத்மநாதன் புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் புதிய தமிழ் அரசியல் கட்சியொன்றை அமைக்கும் முனைப்புக்களின் பின்னணியில் குமரன் பத்மநாதன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நடுநிலைமையான கட்சியொன்று உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புதிய கட்சி அமைப்பது குறித்து குமரன் பத்மநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் குமரன் பத்மநாதனின் யாழ்ப்பாண விஜயம் அமையப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குமரன் பத்மநாதனின் யாழ்ப்பாண விஜயத்திற்கு, புலம்பெயர் தமிழர்களும் இணைந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து படை அதிகாரிகளுடன் குமரன் பத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் எனவும் வடக்கு மக்களின் நன்மைக்காக செயற்படப் போவதாகவும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது குமரன் பத்மநாதன் உணர்வு பூர்வமாக கண்ணீர் மழ்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
குமரன் பத்மநாதன் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளை பூர்த்தியானதன் பின்னர் குமரன் பத்மநாதன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என அரசாங்கம் பாராளுமன்றில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பிரதேசங்களுக்கு விஜயம் செய்த கே.பி.; குழுவினர் வடக்கின் அரசியல் மற்றும் களநிலைமைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நேற்று விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் நேற்று அரைமணி நேரம் நடைபெற்றது. கடந்த இரு நாள்களாக வடக்கில் தாம் மேற்கொண்ட பயணத்தின் போது அவதானித்த விடயங்களை கே.பி. விளக்கினார். அவரது குழுவில் பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் அடங்கி இருந்தனர். இந்தக் குழுவினர் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மக்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடி நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டனர். அவை குறித்தே பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அவர்கள் விளக்கினர்.
 
தமிழ் மக்களின் இன்றைய நிலைமைகளை மேம்படுத்துவது தொடர்பில் பல கோரிக்கைகள் இந்தச் சந்திப்பின் போது கே.பி. குழுவினரால் முன்வைக்கப்பட்டன எனவும் அவற்றில் மூன்று கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இணங்கினார் எனவும் அறிய கிடைத்துள்ளது. கே.பி. குழுவினர் இன்று வெளிவிவகார அமைச்சின் செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாட உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply