“போரின் போதான மனித உரிமை மீறல்களுக்கு விடுதலைப் புலிகளும் காரணமாக இருந்தார்கள்” – றொபேட் ஓ பிளேக்

“பயங்கரவாதம்சார் கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு மாதிரியாக [model] சிறிலங்காவினது போரின் இறுதி நாட்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையினைக் கருதமுடியும்” என அண்மையில் வெளிவந்த நியூ யோர்க்கர் [New Yorker magazine] சஞ்சிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கருத்துத் தொடர்பாக தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலளர் றொபேட் ஓ பிளேக்கிடம் கேட்கப்பட்டது.

“போர் முன்னெடுக்கப்பட்ட விதத்தினை நான் எதிர்பார்த்த முறை இதுதான் என நான் கூறமாட்டேன்” எனப் பதிலளித்தார் பிளேக்.

கடந்த சனவரி 27ம் நாளன்று தேசியப் பொது வானொலியின் [National Public Radio] துணை வானொலிச்சேவை ஒன்றுக்கு ரொபேட் ஓ பிளேக் செவ்வி ஒன்றை
வழங்கியிருந்தார்.

அந்தச் செவ்வியின் பொருத்தமான பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. ‘transCurrents’ இணைய ஊடகம் வெளியிட்டிருந்த அந்த பகுதிகளை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

கேள்வி: தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராசாங்கச் செயலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நீங்கள் சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்திருக்கிறீர்கள். போர் இடம்பெற்ற அந்தக் காலப்பகுதியில் உங்களின் அனுவம்தான் என்ன?

பதில்: அது எனக்கும் சிறிலங்காவிற்கும் இக்கட்டானதொரு காலகட்டம். பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகளமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் சமாதான முயற்சிகளில் ஈடுபடமுனைந்தது. ஆனால் சிறிலங்காவினை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் பல தாக்குதல்களை நடாத்தியிருந்த நிலையில் அந்த அமைப்பினை இராணுவ ரீதியில் தோற்கடிப்பது என்ற முடிவினைச் சிறிலங்கா எடுத்திருந்தது.

ஆனால் புலிகளமைப்பினை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்று எங்களில் பலர் கருதினர். ஆனால் எந்த எண்ணத்தினையெல்லாம் சிறிலங்கா பொய்யாக்கியது. ஆனால் புலிகளைத் தோற்கடிப்பதற்குச் சிறிலங்கா கொடுத்த விலைதான் அதிகம். குறிப்பாகப் போரின் இறுதி நாட்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் உண்மையான இனநல்லிணக்கம் மற்றும் உருப்படியான பொறுப்புச்சொல்லும் செயற்பாடுகள் இடம்பெறுவது மிகவும் அவசியமானது. அதுபோன்ற செயற்பாடுதான் சிறிலங்கா எப்போதும் ஒரு ஒன்றிணைந்த தேசமாக இருப்பதற்கு வழிசெய்யும். சிறிலங்கா தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய காலமிது.

கேள்வி: “தொடர்புடைய பிராந்தியத்திற்கு ஊடகங்கள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள் போன்றவை செல்லுவதற்கான அனுமதியினை மறுக்கும் அதேநேரம் உங்கள் எதிரியினைத் தனிமைப்படுத்துவதோடு குறுகிய காலத்திற்குள் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேரைக் கொன்று குவிக்கவேண்டும். இதனூடாக எஞ்சியவர்களையும் பேரச்சத்திற்கு உள்ளாக்குவதோடு இடம்பெறும் இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லாது அழிக்கவேண்டும். சிறிலங்காவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு கைக்கொள்ளப்பட்ட உத்தி இதுதான்” என அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்ததை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

சிறிலங்காவின் போரின் இறுதி நாட்களில் நடந்தது எதுவோ அதனை இந்தக் கூற்று சரியாகப் பிரதிபலிப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? இது போன்ற போர்கள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு மாதிரியாக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்களா?

பதில்: இதற்குத் தெளிவான பதிலெதனையும் என்னால் வழங்க முடியும் என நான் நம்பவில்லை. ஆனால், இங்கு சமநிலையொன்று பேணப்படவேண்டியது முக்கியத்துவமானதொன்று என நான் கருதுகிறேன். போரின் போது இடம்பெற்ற பல மீறல் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினரும் காரண கர்த்தாவாக இருந்திருக்கிறார்கள்.

நான் சிறிலங்காவில் பணியில் இருந்தபோது, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வேயுடன் இணைந்து நாங்கள் வெளியிட்ட அறிக்கைகளை அவதானித்தால், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரண்டு தரப்பினருக்குமே உண்டு எனக் கூறிவந்திருக்கிறோம்.

தமிழ்ப் புலிகள் என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997ம் ஆண்டுமுதல் அமெரிக்காவினது பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியில் உள்ளது. உலகிலுள்ள குரூரம் நிறைந்த பயங்கரவாத அமைப்புக்களில் இதுவும் ஒன்று.

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டினது வடக்குப் பகுதிகளை நோக்கிப் படையினர் முன்னேறிக்கொண்டிருந்தபோது கடந்த பல பத்தாண்டுகளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளில் வசித்துவந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் வடக்கு நோக்கி இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த மக்கள் தெற்கு நோக்கி, அதாவது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நகருவதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை.

இந்த மக்களை தெற்கு நோக்கி நகர வைப்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்துலக முயற்சிகள் அனைத்தையும் விடுதலைப்புலிகள் தந்திரோபாயமாகத் தவிர்த்தனர். போரின் மத்தியில் அகப்பட்டிருந்த பொதுமக்கள் வேறு பகுதிக்கு நகர்த்தப்படுமிடத்து அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்கமுடியும் என அனைத்துலக சமூகம் வாதிட்டது.

இதுபோல பொதுமக்கள் தாங்கள் விரும்பிய பிரதேசங்களுக்குப் பொதுமக்கள் செல்வதைத் தடுத்ததன் ஊடாக விடுதலைப் புலிகள் அனைத்துலக சட்டவிதிகளை மீறியிருக்கிறார்கள். போர் தீவிரம்பெற்ற நிலையில் மக்கள் தெற்குநோக்கி நகருவதற்குப் புலிகள் அனுமதித்திருந்தால் இதுபோல மோசமானதொரு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டிருக்காது. காத்திரமான இந்த வாதத்தினை பெரும்பாலும் அனைவரும் மறந்துவிடுகிறார்கள்.

இரண்டாவதாக, ஆட்லறி எறிகணைகள் போன்ற கனரக போர்த்தளபாடங்களை விடுதலைப் புலிகள் வேண்டுமென்றே பொதுமக்கள் இடம்பெயர்ந்து வசித்துவந்த பகுதிகளுக்கு
அண்மையில் நிலைப்படுத்தியிருக்கிறார்கள்.

படையினர் நடாத்தும் பதில் தாக்குதல்களில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்படுமிடத்து அது இந்தப் பிரச்சினை அனைத்துலக கவனம் பெறுவதற்கும் சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக அழுத்தம் வலுப்பெறுவதற்கும் இதுபோன்ற நிகழ்வுகள் வழிசெய்யும் எனப் புலிகள் கருதினர். இதுபோன்ற அழுத்தங்களின் விளைவாக சிறிலங்கா அரசாங்கம் போரை நிறுத்தி அமைதிவழிக்குத் திரும்பும் எனப் புலிகள் தப்புக்கணக்குப் போட்டனர்.

நாங்கள் மோசமானதொரு சூழமைவினை எதிர்கொண்டமைக்கான காரணம் இதுதான். ஒருபுறம் பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லாதொழிக்கப்படவேண்டும் என நாங்கள் விரும்பினோம். மறுபுறம் இதன் விளைவாக அதிக பொதுமக்கள் இழப்புக்கள் இடம்பெறாமல் இருப்பதை நாம் உறுதிப்படுத்த விரும்பினோம்.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்த போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் இரண்டு தரப்பினரும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நான் இங்கு கூறியாக வேண்டும்.

சிறிலங்காவிற்கு நான் முன்னர் தெரிவித்த கருத்தையே தற்போதும் கூற விரும்புகிறேன். சிறிலங்காவில் உண்மையான இன நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். நாட்டினது வடக்குப் பகுதியில் புதிய அரசியல் தலைமைத்துவத்தினை இனங்காணும் வகையில் தேர்தல்கள் இடம்பெறவேண்டும். அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்றது எதுவோ அதற்குப் பொறுப்புச்சொல்லும் கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

இதுதான் காட்புணர்ச்சியும், வெறுப்புணர்வும் கொண்ட தனது முன்னைய வரலாற்றினை ஒருபுறம் வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகள் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமானது. இடம்பெற்ற கொலைகளுக்கு யார் பொறுப்போ அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது கட்டாயம்.

– புதினப்பலகை

மூலம்/ஆக்கம் : நேர்காணல்


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply