பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி நாளை சத்தியாக்கிரகம்

சிறைவைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாளை 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு மகஸின் சிறைச்சாலை முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் அறிவித்தார்.இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார். பெலவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி. இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இப்போராட்டமானது ஜே.வி.பி.க்காக செய்யப்படவில்லை. நாட்டு மக்களின் நன்மைக்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படவுள்ளது. எமது நாட்டின் 63ஆவது சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக ஜனநாயகப் பேரணியை நடாத்த முடியாதுள்ளது. ஐ.தே.கட்சி பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்தின் குண்டர்களே இதனை நடத்தினர்.

எனவே, நியாயமான விசாரணைகளை எதிர்பார்க்க முடியாது. குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள்.

ஊடக நிறுவனங்கள் தீ வைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயல்களை முழு உலகமே இன்று புரிந்துகொண்டுள்ளது.

இதனை தொடர இடமளிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி போராட்டங்களுக்கு முன்வர வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


Both comments and pings are currently closed.

Comments are closed.