எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவிவிலகினார்!

எகிப்து நாட்டின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் நேற்று பதவி விலகியுள்ளார். அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்மூலம் ஹொஸ்னி முபாரக்கை பதவி விலகக்கோரி கடந்த 18 நாட்களாக பல்லாயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டம் வெற்றியளித்துள்ளதுடன் தற்போது அந்நாட்டின் நிருவாகம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி சேவை தெரிவித்துள்ளது.

எகிப்து ஜனாதிபதியாக நீண்டகாலம் பதவி வகித்த முபாரக் அப்பதவியிலிருந்து விலகுவதாக தேசிய தொலைக்காட்சி மூலம் துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான் அறிவித்ததையடுத்து, கெய்ரோ நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பட்டாசுகளை கொளுத்தியும் கூச்சலிட்டும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எகிப்து ஜனாதிபதியாக கடந்த 30 ஆண்டுகளாக ஹொஸ்னி முபாரக் பதவி வகித்துவந்தார். அவர் ஊழல்மிக்க, முறைகேடான ஆட்சியை நடத்திவருவதாக குறிப்பிட்டும் அவரை பதவிவிலகக்கோரியும் எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள தஹ்ரீர் சதுக்கத்தை மையமாகக் கொண்டு கடந்த 18 நாட்களாக இவர்கள் போராட்டம் நடத்திவந்தனர். நாளுக்குநாள் போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தது. எகிப்திய தேசிய கொடி, பதாதைகள் என்பவற்றை ஏந்தி முபாரக்குக்கு எதிராக கோஷமிட்டவாறு இடைவிடாத ஆர்ப்பாட்டத்திலும் இவர்கள் ஈடுபட்டனர்.

போராட்டம் வலுவடைந்தபோதும் முபாரக் பதவி விலகுவதற்கான அறிகுறிகள் தென்படாததையடுத்து தஹ்ரீர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். இதனால் நிலைமை இன்னும் மோசமடைந்தது. எகிப்தில் நடைபெற்ற போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்த அதேநேரம், போராட்டக்காரர்களுடன் சமரசமான பேச்சுக்களை முபாரக் நடத்தவேண்டுமென அமெரிக்கா உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையில் போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்சித்த எகிப்திய இராணுவத்தினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலினால் சுமார் 350 பேர் உயிரிழந்ததோடு 1500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதேவேளை, எகிப்து மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தாம் அடிபணிவதாக அந்நாட்டு இராணுவம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே மூன்று தசாப்தகால ஜனாதிபதி பதவியிலிருந்து ஹொஸ்னி முபாரக் பதவி விலகியுள்ளார்.

எகிப்து தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஒமர் சுலைமான், நாட்டில் உருவாகியுள்ள தவிர்க்க முடியாத காரணங்களினால் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தீர்மானித்துள்ளார். குடியரசு நாடு ஒன்றின் அரச தலைவர் என்ற வகையில் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது மாளிகைக்கும் பிரியாவிடை கொடுக்கிறார். அதேநேரம் நாட்டின் நிருவாகத்தை கொண்டு நடத்துவதற்கான அதிகாரம் பாதுகாப்பு படைகளின் உயர்பீடத்திற்கு வழங்கப்படுகின்றது. இறைவனே எம்மை பாதுகாப்பவன்; உதவியளிப்பவன் என்று கூறினார்.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து தலைநகர் கெய்ரோவிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள மக்கள் பட்டாசுகளை கொளுத்தியும் கூச்சலிட்டும் வாகனங்களில் அதிக ஒலி (ஹோர்ன்) எழுப்பியும் தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு இராஜ்யத்தையே பதவி கவிழ்த்துள்ளோம் என தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், எகிப்து பல தசாப்தங்களுக்கு பின்னர் விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, முபாரக் பதவி விலகும் அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னர் இராணுவ தரப்பு வெளியிட்ட செய்தியில், தற்போதைய நிலைமைக்கு முடிவொன்று வந்தவுடனேயே 30 ஆண்டுகளாக நடைமுறையிலிருக்கும் அவசரகால சட்டம் தமது நிருவாகத்தின் கீழ் நீக்கப்படுமென தெரிவித்திருந்தது.

அத்துடன், அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பிலும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவது தொடர்பிலும் எகிப்திய மக்களுக்கு தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பதவிவிலகிய சில மணி நேரத்தில் முபாரக், எகிப்திலிருந்து வெளியேறியுள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply