எகிப்து நாடாளுமன்றம் கலைப்பு

எகிப்து நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது, இப்போதைய அரசியல் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கைக் குறைவாக இருப்பதால் அது செயல்படாமல் நிறுத்திவைக்கப்படுகிறது என்று நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுள்ள ராணுவக் கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஹோஸ்னி முபாரக்  ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களின் முக்கிய கோரிக்கைகளில் இரண்டை இதன் மூலம் ராணுவக் கவுன்சில் நிறைவேற்றிவிட்டது.

6 மாதங்களில் ஆட்சி மாற்றம்: எகிப்தின் வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கருதி இன்னும் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதியவர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவக் கவுன்சில் அறிவித்தது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஆட்சி மாற்றம் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் ஒழிந்தது: எகிப்து நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலில் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அனேக தில்லுமுல்லுகளைச்  செய்து பெரும்பான்மை வலுவைப் பெற்றது. ஜனநாயக விரோதமாகச் செயல்பட்டதுடன், ஜனநாயகத்தையே குழி தோண்டிப் புதைக்கும் வகையில் தேர்தல் நடைமுறையிலும் தில்லுமுல்லு செய்ததற்காகத்தான் முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். போலீஸýம் ராணுவமும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதால் தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பிலேயே முபாரக் வாழ்ந்தார். ஆனால் மக்கள் சக்தி, காந்திய பாணியில் சத்தியாகிரகப் போராட்டமாக உருவெடுத்து 20 நாள்களுக்குள் ஆட்சியையே புரட்டிப்போட்டுவிட்டது.

300-க்கும் மேற்பட்டோர்: ராணுவம், போலீஸôரின் எதிர் நடவடிக்கைகளில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் ரத்தம் சிந்துதல் இல்லாமல் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது.

காலையில் கைகலப்பு: ஞாயிற்றுக்கிழமை காலை கெய்ரோ நகரின் தாரிர் சதுக்கத்தைச் சுத்தம் செய்ய ராணுவத்தினர் முயன்றனர். ஆனால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து அகல மறுத்தனர். இதனால் அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம்  நாடாளுமன்ற கலைப்பு, அரசியல் சட்ட அமல் நிறுத்திவைப்பு ஆகியவை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதை மகிழ்ச்சியோடு வரவேற்ற கிளர்ச்சியாளர்கள் அதன் பிறகே அங்கிருந்து வெளியேறச்  சம்மதித்தனர்.

பிரதமர் அகமது ஷபீக் அழைப்பு: அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாட்டில் சுமுகமான ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் இடைக்கால அரசின் லட்சியம். அதற்கும் முன்னதாக நாட்டின் பாதுகாப்பில் நாம் அக்கறை செலுத்தியாக வேண்டும். அனைவரும் அவரவர் வீடு திரும்பி, உங்களுடைய வேலைகளைத் தொடருங்கள். அரசு நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தும் பணியை நாங்கள் கவனிக்கிறோம். தவறு செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துகிறோம்.

தொழில்துறையிலும் பிற துறைகளிலும் உற்பத்தி தொடரட்டும். மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தொடரட்டும். இயல்பு வாழ்க்கை ஆரம்பமாகட்டும் என்று பிரதமர் அகமது ஷபீக் வேண்டுகோள் விடுத்தார்.

நிலையற்ற தன்மை ஏதும் இருக்கக்கூடாது. எகிப்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் அச்சமின்றி வருவதற்கு வழி செய்யுங்கள். மக்களுக்குரிய உரிமைகள் அவர்களிடமே அளிக்கப்படும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கும் என்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி முடித்ததும் நாட்டு மக்களுக்கு அவர் அறிவித்தார்.

இயல்புநிலை திரும்பியது: எகிப்து நாட்டின் அனைத்து நகரங்களிலும் இயல்பு நிலை திரும்பியது. சதுக்கங்களிலும் சாலைகளிலும் ஏற்படுத்தியிருந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. போக்குவரத்து வழக்கம்போல இருந்தது. அரசு அலுவலகங்களும் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் நீண்ட நாள்களுக்குப் பிறகு திறந்து செயல்பட்டன. தண்ணீர் சப்ளை, மின்சார சப்ளை ஆகியவையும் இயல்பு நிலைக்கு வந்தன.

கெய்ரோவைத் தவிர பிற ஊர்களில் நகர சதுக்கங்களில்கூட கூட்டம் இல்லை.

3 பேருக்கு பயணத் தடை: முன்னாள் பிரதமர் அகமது நஜீஃப், முன்னாள் செய்தித்துறை அமைச்சர் அனாஸ் எல் ஃபெக்கி, முன்னாள் உள்துறை அமைச்சர்ஹபீப் அல் ஆத்லி ஆகியோர் கெய்ரோவைவிட்டு வெளியே எங்கும் போகக்கூடாது, அழைக்கும்போது விசாரணைக்கு வர வேண்டும் என்று புதிய ஆட்சியாளர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொண்டாட்டம் ஓயவில்லை: இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டாலும் முபாரக்கின் பதவி இறக்கத்தை மக்கள் இன்னமும் கொண்டாடிக்கொண்டே இருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply