அமைச்சர் டக்ளசுக்கு பிணை வழங்கக் கூடாது எதிர் மனு
சூளைமேடு பொலிஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்கு தொடர்பாக முன்பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்யுமாறு சூளைமேடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஷிபுகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்றைய தினம் இவ்விரு மனுக்களையும் கவனத்தில் கொண்ட நீதியரசர் கே.என்.பாஷா, வழக்கு பதிவினை பிரதம நீதியரசரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி அமைப்பில் (இ.பி.ஆர்.எல்.எப்.) இருந்த போது சென்னை திருவள்ளூர்புரத்தில் தங்கியிருந்தேன். என்னுடன் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்கி இருந்தனர். 1.11.86 அன்று அந்தப் பகுதி மக்களுடன் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது.
அப்போது செல்வானந்தன் ஏ.கே.47 துப்பாக்கியையும், சுரேஷ், ரமணன் ஆகியோர் தானியங்கி எந்திர துப்பாக்கியையும் எடுத்து வந்து பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் திருநாவுக்கரசு என்பவர் இறந்தார். சிலர் காயமடைந்தனர்.
இது சம்பந்தமாக சூளைமேடு பொலிஸார், என் மீது மற்றும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னை 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் 1987-ம் ஆண்டு சாட்சி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் எங்களுக்கு பிணை அளிக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றில் ஆஜராகாததை அடுத்து எங்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எங்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மேலதிக நீதிமன்றத்தில் சூளைமேடு பொலிஸார் மனுதாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்தியா – இலங்கை இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து நான் இலங்கைக்கு அனுப்பப்பட்டேன். எனவே என் மீதான கொலை வழக்கு இயல்பின்படி கைவிடப்பட்டு இருக்கும் என்று நம்பினேன். தற்போது இலங்கையின் அமைச்சவை அமைச்சராக நான் இருக்கிறேன்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு வந்த போது, எனக்கு எதிரான தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பு நிலுவையில் இருப்பதாக தெரிய வந்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். மேலதிக நீதிமன்றம் அறிவித்தபடி நான் தேடப்படும் குற்றவாளி இல்லை என்று 8.12.10 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கொலை வழக்கு தொடர்பாக முன்பிணை மனு தாக்கல் செய்யலாம் என்றும் பிடியாணையை திரும்பப் பெறலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. நான் இந்த வழக்கை எதிர்கொள்ளவும் நேரில் ஆஜராகவும் தயாராக இருக்கிறேன். எனவே எனக்கு முன்பிணை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply