தமிழக மீனவர் 136 பேரும் விடுதலை தமிழகக் கடல் எல்லை வரை இலங்கைக் கடற்படை படகுகள் பாதுகாப்பு
பருத்தித்துறை முனை மற்றும் மாதகல் கடற்பரப்பில் யாழ். கடற்றொழிலாளர்களினால் சிறை பிடிக்கப்பட்ட 136 தமிழக மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.தமிழகத்திலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த அவர்களது 25 வள்ளங்களிலேயே அவர்களை பாதுகாப்பாக அனுப்புமாறு பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான்கள் பொலிஸாருக்கு உத்தரவிட்டனர்.
இரண்டு கடற்படை படகுகள் 136 தமிழக மீனவர்களையும் தமிழக கடல் எல்லைவரை சென்று வழியனுப்பி வைத்தது. கடந்த 15ஆம் திகதி 18 இழுவைப் படகுகளில் பருத்தித்துறை முனை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 112 தமிழக மீனவர்களை யாழ். மீனவர்கள் சிறைபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
16ஆம் திகதி மாலை இவர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மறுநாளும் மாதகல் கடல் பரப்பில் 24 தமிழக மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு 17ஆம் திகதி மாலையே நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பதற்ற நிலையை உருவாக்கியதுடன், தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இரு நாடுகளுக்குமிடையே இருந்துவரும் உறவுகள் வலுப்பெற்றுவரும் இந்நிலையிலும், தமிழக மற்றும் வடபகுதி மீனவர்களுக்கிடையே சுமுகமான பேச்சுவார்த்தை யொன்றை நடத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வரும் நிலையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது தொடர்பில் இரு நாட்டு முக்கியஸ்தர்களும் ஆராய்ந்து வந்தனர்.
இவர்களது விடுதலை குறித்தும் சுமுக பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கிடையேயும் பேச்சுக்கள் நடைபெற்றன.
இந்த நிலையிலேயே யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி அமரக்கோன் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கான மனுவை யாழ். பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிமன்றத்தில் தக்கால் செய்தார்.
இதனையடுத்து 136 பேரையும் நீதிவான்களான திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் விடுதலை செய்தனர்.
நீதவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் தாம் அத்துமீறி யாழ். குடா கடற்பரப்பிற்குள் புகுந்ததை ஒப்புக் கொண்டதுடன், மன்னிப்பும் கோரினர். அத்துடன் யாழ். மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டாலும் தம்மை மிகவும் அன்பாக பராமரித்தனர் என்றும் உணவு, உடை வழங்கி தாய் நாட்டில் இருந்த உணர்வுடன் தாம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை யாழ். மீனவர்கள் சார்பில் பருத்தித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சட்டத்தரணியான மு. ரெமிடியஸ், பொ. குமாரசுவாமி, கே. சிவகுருநாதன், எஸ். கந்தசாமி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இலங்கையில் யாழ். குடா கடற்பரப்பினுள் அத்துமீறி தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் ஏற்படும் கடல்வள அழிவு மற்றும் குடாநாட்டு மீனவர்களின் பொருளாதார பாதிப்பு, அழிவு தொடர்பாக சட்டத்தரணிகள் விவாதங்களை முன்வைத்தனர்.
யாழ். நகரிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் துணை தூதர் வெ. மகாலிங்கம், மற்றும் தூதரகத்தில் 2வது அதிகாரி வினோத்குமார் வர்மா ஆகியோரும் சென்றிருந்தனர்.
விடுதலையான 136 தமிழக மீனவர்களும் அவர்களது 25 படகுகளுடன் பருத்தித்துறை கடற்கரையிலிருந்து நேற்று மாலை 4.30 மணியளவில் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
136 தமிழக மீனவர்களுக்கும் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்பளிப்பு பொதிகளையும் வழங்கி வழியனுப்பி வைத்தார்.
இந்திய துணை தூதரகத்தின் துணை தூதர் வெ. மகாலிங்கம், வினோத்குமார் வர்மா, பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி அமரக்கோன், பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் புஸ்ஸல்லகே, யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பலரும் வந்து தமிழக மீனவர்களை வழியனுப்பி வைத்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply