மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அவசியம்: பிளேக்

மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மிகவும் முக்கியமானது என கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார்.
 
இலங்கையின் இனப்பிரச்சினையானது பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என ரொபேர்ட்.ஓ.பிளேக், அண்மையில் கொழும்பிலுள்ள வர்த்தக பிரமுகர்களைச் சந்தித்தபோது மீண்டும் ஒருதடவை வலியுறுத்திக் கூறியிருந்தார்.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இலங்கையிலுள்ள சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும் மனித உரிமைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அமெரிக்கத் தூதுவர், “இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பதற்கு ஒரு சிறந்தவழி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக தீர்மானமொன்றை எட்டுவதே. அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் 90 வீதமான தீர்வு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் எட்டப்பட்டுவிட்டது. இது சிறந்ததொரு சந்தர்ப்பம் என இலங்கையர்கள் நம்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு, மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுதல் மற்றும் தற்பொழுது இலங்கையில் தோன்றியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினை ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி, ரெபேர்ட்.ஓ.பிளேக், வர்த்தக சமூகத்தினருக்கு விளக்கமளித்தார்.

விடுதலைப் புலிகளின் பயங்கராவதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட முடியாதென்பதுடன், தமிழர்களின் அனைத்து உரிமைகளும் அரசியல் தீர்வின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் பிளேக் கூறினார்.

இலங்கையில் சமாதானம் ஏற்படுவதற்கும், பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடரும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply