சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். அலுவலகத்திற்கு மூடு விழா
இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. எவ்வாறிருந்தபோதும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள தேவைகள் தொடர்பான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் அலுவலகம் 21 வருட சேவையின் பின்னர் மூடப்படுகின்றது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் தொடர்பான வரலாற்றில் இதுவொரு முக்கிய கணப்பொழுதாகும்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வலுவிழந்தோருக்கும் அங்கவீனர்களான மக்களுக்கும் உதவுகின்ற யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்துக்கான ஆதரவைத் தொடர்ந்தும் ஐ.சி.ஆர்.சி. வழங்கும்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கமானது, சார்பு உறுப்புகளையும், நடமாடும் உபகரணங்களையும் உற்பத்தி செய்வதற்கான பொலிப்புறொப்பலீன் போன்ற மூலப்பொருட்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் இந்த நிலையத்துக்கு வழங்குகின்றது.
சிறைச்சாலைகளிலும் ஏனைய இடங்களிலும் உள்ள நபர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையிலான குடும்பத் தொடர்புகளைப் பேணும் நோக்குடைய செஞ்சிலுவையின் குடும்ப சந்திப்புகளுக்கு வசதியளிக்கும் திட்டமானது, இதற்கு பின்னர் கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர்.சி. அலுவலகத்தின் மூலமும் வவுனியாவிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளை மூலமும் மேற்கொள்ளப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply