இறுதிச்சடங்கு இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுப்போடும் செயற்பாடு தான் ஜனநாயகமா?

பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்ற மக்களை மிரட்டி அவர்களை அச்சுறுத்துவதும், அவரது இறுதிச் சடங்கு இடம்பெற்ற இடத்தில் நாய்களை

சுட்டுப் போடுகின்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தான் இந்நாட்டிலுள்ள ஜனநாயகமா? இதற்காகத்தான் அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றதா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

அரசாங்கத்தின் அரசியல் இலாபத்துக்கான அவசரகாலச் சட்டமானது சிறைகளிலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்கும் தடையாக இருப்பதாகவும் கூறிய அவர், தமிழ் மக்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் சிந்தனையாக இருக்கின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலாதன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 34 வருடங்களாக அமுலில் இருந்து வருகின்ற அவசரகாலச் சட்டமானது தமிழ் மக்கள் மீது பாரிய ஆளுமையை செலுத்தி வருகின்றமையானது வேதனையைத் தருகின்றது. துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள், கெடுபிடிகள் ஆகிய அனைத்தையும் தமிழ் மக்கள் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழேயே அனுபவித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக வடக்கிலே எமது மக்கள் கடத்தப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர், அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

இவ்வாறான சூழலில்தான் இந்த அவசரகாலச் சட்டத்தின் ஆளுமை எமது மக்களில் பரவப்பட்டிருக்கின்றது. புலிகள் ஒடுக்கப்பட்டு விட்டதாகவும், பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறுகின்ற அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை மாத்திரம் ஏன் நீடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

தொடர்ந்தும் எமது மக்களை அடக்கி ஆள்வதும் அடக்கு முறைகளுக்குள்ளாக்கி வைத்திருப்பதுதான் அரசாங்கத்தின் சிந்தனையா? எமது மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அவசரகாலச் சட்டத்தினால் எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகள் நிறைந்து காணப்படுகின்றன. பஸ்களில் பயணிக்கின்றவர்கள் சோதனை என்ற பெயரில் ஏற்றி இறக்கும் நிலைமை தொடர்கின்றது.

கடலுக்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலைமையை எமது மீனவ தொழிலாளர்கள் அனுபவிக்கின்றனர். அவர்கள் கடலுக்குச் செல்வதற்கான பாஸ் நடைமுறை இன்னும் முன்னெடுக்கப்படுகின்றது.

மீனவர்கள் தமது பாஸ்களை அங்கீகரித்துக் கொள்வதற்கென இராணுவம், கடற்படை, கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளது. இவ்வாறு அனுமதி பெற்று சகல சோதனைகளின் பின்னர் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது காலை 10 மணியாகி வருகின்றது.

இதனால் அவர்களது தொழிலும் பாதிக்கப்படுகின்ற அதேவேளை, வலைகளும் மீன்களும் காணாமல் போகின்ற நிலைமைகளும் உருவாகின்றன. தமிழ் மீனவர்களின் நிலைமை இவ்வாறிருக்க, மன்னார் பகுதியில் இருக்கின்ற சிங்கள மீனவத் தொழிலாளர்கள் பாஸ் நடைமுறைக்கோ அல்லது சோதனை நடவடிக்கைகளுக்கோ அப்பாற்பட்டவர்களாக எந்தவித கெடுபிடியும் இன்றி தமது தொழிலை மேற்கொள்கின்றனர்.

அனைத்து சமூகமும் சமத்துவமாக வாழ வேண்டும் என்று கூறிக் கொண்டு இவ்வாறு இனப்பாகுபாடு காட்டப்படுவது எதற்காக. இவ்வாறு அரசாங்கம் நடந்து கொள்ளுமானால் அரசாங்கம் கூறுவதுபோல் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவது பொய் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எமது மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக அரசாங்கம் சர்வதேசதுக்கு கூறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களிலேயே வாழ்கின்றனர்.

அங்கு தற்போது சிவில் நிர்வாகம் கிடையாது. இராணுவ நிர்வாகமே காணப்படுகின்றது. நள்ளிரவு வேளைகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்கின்ற இராணுவத்தினர், அங்கு சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதனால் கதவுகளோ, யன்னல்களோஇல்லாத கூடாரங்களில் தங்கியுள்ள யுவதிகள் பெரும் அசௌகரியத்தை அனுபவக்கின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலை அவசரகாலச் சட்டத்தின் கீழேயே இடம்பெறுகின்றது.

இது இவ்வாறிருக்க, மன்னாரில் மணல் ஏற்றும் தொழில் அல்லது மர வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபடுகின்ற தமிழ் மக்களிடத்தில் பொலிஸார் 500 ரூபாவை வரியாக அறவிடுகின்றனர். காரணம் கேட்கும் சந்தர்ப்பத்தில் புலிகளுக்கு வரி கொடுத்தீர்கள் தானே? அப்படியானால் எமக்கும் அதனைச் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

எமது மக்கள் துன்பத்துக்கு மேல் துன்பம் அனுபவிக்கின்றனர். ஆனால் அரசாங்கமோ தனது நல்லெண்ணத்தைக் காட்டுவதாக கூறிக் கொள்கின்றது. இன்றைய சூழலில் எமது மக்கள் சாப்பிடுவதற்கு மாத்திரமே வாய் திறக்கின்றனர். அவர்கள் பேசுவதற்கான சுதந்திரத்தை இழந்துள்ளனர்.

வடக்கிலே தேர்தல்களில் போட்டியிடுகின்ற எமது வேட்பாளர்கள் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர்கள் மிரட்டப்படுகின்றனர்.

பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் மிரட்டப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர். பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கு இடம்பெற்ற இடத்தில் நாய்கள் சுட்டுப் போடப்பட்டுள்ளன. இதுதான் இந்நாட்டில் உள்ள ஜனநாயகமா?

இதுவரை காலமும் யுத்தம் எமது மக்களை துரத்திக் கொண்டிருந்தது. தற்போது இயற்கை அனர்த்தம் துரத்திக் கொண்டிருக்கின்றது.

சுனாமி அனர்த்தத்தை விட பெரு வெள்ளத்தினால் எமது மக்களின் இழப்பு ஏராளமாகும். அவர்களின் விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் பாழாகியுள்ளன. வங்கிகளில் கடன் பெற்றும் தங்க நகைகளை அடகு வைத்தும் விதைத்த விளைச்சலை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு எஞ்சியது கடன் சுமை மாத்திரமே ஆகும்.

வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொடர்பில் கடனாளிகளால் கூறப்படுகின்ற காரணங்கள் எதுவும் வங்கி அதிகாரிகளினால் ஏற்கப்படுவதில்லை.

கடனாளியாகவும் வாழ வழியில்லாத நிலைக்கும் உள்ளாகியுள்ள எமது விவசாய மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்கும் வகையில் அவர்களால் வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை அவர்களிடம் இருந்து திரும்பப்பெறும் விடயத்தை வங்கிகள் நிறுத்திக்கொள்ளும் அளவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் அவசரகாலச் சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் கெடுபிடிகளும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்துக் கொண்டே போகுமிடத்து தமிழ் மக்களின் விடுதலை வேட்கையானது கொழுந்துவிட்டு எரியவே செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேவேளை, பெரு வெள்ளத்தால் அவதியுற்ற எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய கடற்படையினர், இராணுவத்தினருக்கு நன்றி கூறுவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் உதவிகளை மேற்கொண்ட அரச அதிகாரிகள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். _

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply