லிபியாவிலுள்ள இலங்கைத் தூதுவரோடு தொடர்புகொள்ள முடியவில்லை

லிபியாவிலுள்ள இலங்கைத் தூதுவரோடு தொடர்புகொள்ள தாங்கள் எடுத்த முயற்சி ஆரம்பத்தில் பலனளிக்கவில்லை என்றும் தாங்கள் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றோம் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிக்கின்றார். லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால் அங்கு தலைநகர் திரிப்போலியில் மாட்டிக்கொண்டுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
 
திரிப்போலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள 600 பேர்வரையான இலங்கையர்களை கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக நாட்டுக்கு அழைத்துவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிக்கின்றார்.
 
இது தொடர்பாக அவர்  கூறும்போது, லிபியாவிலிருந்து இப்போதைக்கு 37 பேர் கிரீஸை வந்தடைந்துள்ளனர். அவர்களை கிரீஸீலிருந்து நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
 
அது தவிர லிபியாவில் இப்போது இலங்கைத்தூதரகத்தில் 600 பேர் வரை தஞ்சமடைந்துள்ளனர்.அவர்களை தூதரகத்துக்குட்பட்ட நிறுவனங்களில் தங்கவைத்திருக்கின்றோம். அவர்களை ஆகாயமார்க்கமாக கொண்டுவருவதற்காக எமிரேட்ஸ் போன்ற விமானசேவை நிறுவனங்களுடன் பேசிவருகின்றோம்.
 
வர்த்தக ரீதியான விமான நிறுவனங்கள் இப்போது திரிப்போலியில் நிலவும் பிரச்சனைகளால் அங்கு செல்ல விரும்பவில்லை. அவர்கள் அங்கு செல்ல ஆரம்பித்ததும் இலங்கையருக்கு முன்னுரிமையளித்து அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளனர். நாங்கள் அதுவரை காத்திருக்கப் போவதில்லை.
 
இந்தியர்களை அழைத்துவருவதற்காக அங்கு கப்பல் ஒன்று செல்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சினூடாக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவுடன் பேசி அந்த இந்தியக் கப்பலில் இலங்கையரையும் அழைத்துவந்து அருகிலுள்ள நாடொன்றிலாவது அதாவது மோல்டா அல்லது எகிப்து அல்லது கிரீஸுக்கு அழைத்துவரலாம் என்று எண்ணியுள்ளோம்.
 
பின்னர் அந்த நாடுகளிலிருந்து அவர்களை எம்மால் இலகுவாக அழைத்துவர முடியும். இதற்கான எல்லா நடவடிக்கைகளும் இப்போது ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றது. எனது அமைச்சினூடாக 24 மணிநேரமும் இதற்காக தனியான அணியொன்று இயங்கிக்கொண்டிருக்கின்றது. அவர்கள் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை தகவல்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். என்று கூறினார் அமைச்சர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply