த.ம.வி.பு.களின் ஆயுதங்களைக் களைய அரசாங்கம் தீர்மானம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான பிரிவினருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்திருப்பதே அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்துக்கு முக்கிய காரணம் எனத் தெரியவருகிறது.

இதன் ஒரு அங்கமாக அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களுக்கு பொலிஸார் அல்லது இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும், தற்போது பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கடும் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ளவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் அங்குள்ள பொலிஸாரும், இராணுவத்தினரும் தமது பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். தமது கடமைகளைச் செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்திருப்பதாகத் தெரியவருகிறது.
இதனையடுத்தே கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஆயுதங்களைக் களைந்து அவர்களை பாதுகாப்புத் தரப்பில் இணைத்துக் கொள்வதற்கான திட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்திருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த ஆயுதங்களைக் களையும் நடவடிக்கை எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கும் என பாதுகாப்புத் தரப்பு வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply