பணிகளைத் தொடர ஆதரவு தாருங்கள் : முதல்வர் கருணாநிதி

தி.மு.க. அரசு ஏற்றுக்கொண்டிருக்கிற பணிகளை முழுமையாக நிறைவேற்ற இந்த ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நிதியமைச்சர் க. அன்பழகனை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: வில்லிவாக்கம் தொகுதி எந்த அளவுக்கு வெற்றியை வழங்கக் கூடியதாக இருக்கிறது என்பதை நான் வருகிற வழியெல்லாம் கண்டேன்.

உங்களது அன்பால், அரவணைப்பால், ஆதரவால் அன்பழகனுக்கு வெற்றி நிச்சயம் என்பதை என்னால் உணர முடிந்தது. இதை உறுதிப்படுத்துகிற வகையில் தி.மு.க.வினர் உழைக்க வேண்டும். தி.மு.க. அரசு எவ்வளவு மேன்மையானது, ஏழை, எளிய மக்களுக்குத் தேவையானது என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தீவுத்திடல் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார். “இந்தியாவிலேயே ஏழை, எளிய மக்களுக்குப் பாடுபடுகின்ற ஒரே ஆட்சி, தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சிதான். அதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அப்படிப்பட்ட முற்போக்கான மாநிலம் இப்போது தி.மு.க.வின் கையில் இருக்கிறது. இந்த ஆட்சி தொடர்ந்து இருந்தால்தான், அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க. வந்தால்தான், ஏற்றுக்கொண்டிருக்கிற பணிகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. ஏறத்தாழ 21 லட்சம் குடிசைகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டு, அந்த குடிசைவாழ் மக்களுக்கு எல்லாம் கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்ற அளவுக்கு திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அந்தத் திட்டம் நிறைவேறவும், சென்னை போன்ற மாநகரங்களில் இருக்கின்ற குடிதண்ணீர் தேவையை நிறைவு செய்யவும், இப்போதே நிறைவு செய்திருந்தாலும் கூட, எஞ்சியிருக்கிற அந்தப் பணிகளை முடிக்கவும் மக்களுடைய ஆதரவு தி.மு.க.வுக்குத் தேவை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்க காரணம் என்ன? நிதியமைச்சராக இருக்கும் அன்பழகன், கணக்கு, வழக்குகளை ஒழுங்காகப் பார்த்து, இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்க முடியும் என்பதை எண்ணிப் பார்த்து, என்னோடு ஆலோசித்து வகுத்த திட்டம்தான் ரேஷன் அரிசித் திட்டம். இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. தி.மு.க. மீண்டும் அரசமைக்குமானால் பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். முற்போக்கான, ஏழைகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடிய, ஏழைகள், பாட்டாளிகள், நடுத்தர மக்கள், தாய்மார்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பாடுபடுகிற ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

உங்களது வாக்குகளை தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி. கொளத்தூரில் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருணாநிதி பேசியது: ஸ்டாலின் எனது மகன் என்பதைவிட மக்களுக்காக, கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அவர் ஏராளமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். பல தியாகங்கள் செய்து சிறையைக் கண்டு அஞ்சாமல் இயக்கத்தை வளர்த்த, வளர்க்கின்ற ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார். நிதியமைச்சர் அன்பழகன், வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். தி.மு.க. பொதுச்செயலாளரும், நிதியமைச்சருமான அன்பழகனை ஆதரித்து சென்னை வில்லிவாக்கத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்கிறார் முதல்வர் கருணாநிதி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply