‘அருட்தந்தை மீது அழுக்குநீர் வீச்சு ஒரு எச்சரிக்கை’
இலங்கையின் வடக்கே யாழ் ஊர்காவற்துறை பங்குத் தந்தை ஜெயக்குமார் அடிகளார் மீது அழுக்கு நீர் வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யக் கோரியும் யாழ் அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியம் யாழ் படைகளின் கட்டளையதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.இந்த சம்பவத்தை சமூகப் பிரச்சனைகளை பேசவிடாது எச்சரிக்கும் நடவடிக்கை என அந்த அமைப்பு கண்டித்துள்ளது.
அருட்தந்தை ஜெயக்குமார் இனந்தெரியாத சிலரால் அழுக்குநீர் வீசி நிந்திக்கப்பட்ட விடயம், யாழ்குடாநாட்டில் பல்கலைக்கழக சமூகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் என சிவில் சமூகத்தின் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கிலிருந்து வந்த சர்வமத தலைவர்களுடனான சந்திப்பின்போது யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படையாக அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார் கூறியிருந்ததாக யாழ் அரசசார்பற்ற அமைப்புகளின் இணையத்தின் தலைவர் வீ.கேசவன் தெரிவித்தார்.
அந்தக் கருத்துக்களை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த முதலாம் திகதி இரவு அருட்தந்தையின் தங்குமிடத்துக்குச் சென்ற சிலர் அவரை அழைத்து அழுக்குநீரை வீசியெறிந்து விட்டு சென்றதாகவும், அந்த நபர்களில் ஒருவர் கைத் தொலைபேசியொன்றை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றதாகவும் அதனை அருட்தந்தை பொலிசில் ஒப்படைத்துள்ளதாகவும் கேசவன் கூறினார்.
யாழ் குடாநாட்டில் இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள சம்பவங்களுக்கு எவ்விதமான உரிய பதில் நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலும் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கில்லையெனவும் யாழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் தமிழோசையிடம் கூறினார்.
யாழ் படைகளின் கட்டளையதிகாரி
இதேவேளை இந்த முறைப்பாடு தொடர்பாக, யாழ் படைகளின் கட்டளை அதிகாரி, மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த விவகாரம் பொலிசாரின் நடவடிக்கைக்கு உட்பட்ட விடயம் என்று தெரிவித்தார்.
யாழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் அனுப்பியுள்ள கடிதத்துக்கு தான் பதில் அனுப்பவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply