‘பிரான்ஸில் புர்கா தடை அமலுக்கு வருகிறது’
இஸ்லாமியப் பெண்கள், முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் அணியும், புர்கா என்ற அங்கியை அணிவதற்கு பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு மத மற்றும் கலாச்சார ரீதியான அடக்கு முறையிலிருந்து விடுதலை தரும் ஒரு முற்போக்கான சட்டம் என்று ஒரு சாராரும், இஸ்லாமிய சமூகம் தனது கலாச்சாரத்தைப் பேணுவதன் மீதான தாக்குதல் இது என்று மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர்.
பிரான்சில் இருக்கும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் சமூகத்தில் இது குறித்து என்ன கருத்து நிலவுகிறது என்று, பிரான்சின் சார்ஜெய் நகரில் கவுன்சிலராக இருக்கும், மஸ்தான் முகமது காசிம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இது ஒரு மதப்பிரச்சினையல்ல ஒரு கலாச்சாரப் பிரச்சினைதான் என்றார்.
ஆனால், இந்தியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் பேசும் முஸ்லீம் என்ற வகையில், தனது சமுதாயத்தில் இது போன்ற அங்கிகளை பெண்கள் அணிவதில்லை என்பதால் இது தங்களது சமூகத்தைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகத் தான் கருதவில்லை என்றார் அவர்.
பிரெஞ்சு அரசு வெளியிட்ட தகவல்களின்படியே சுமார் 2,000 முஸ்லீம் பெண்கள்தான் பிரான்சில் இது போன்ற அங்கியை அணிகிறார்கள். இவ்வளவு சொற்ப எண்ணிக்கையிலானோரை சம்பந்தப்படுத்தும் ஒரு பிரச்சினைக்கு ஒரு சட்டம் அவசியமா என்ற கேள்வி எழுகிறது என்றார் அவர்.
பிரான்ஸ் விரைவில் தேர்தல்களை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே பலராலும் கருதப்படும் என்றார் அவர்.
ஆனால், ”இது போன்ற ஒட்டுமொத்த உடலையும்,முகத்தையும் மறைக்கும் இந்த அங்கியை அணிந்திருப்பவர் உண்மையில் பெண்ணா அல்லது ஆணா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும், இது போன்ற ஆடைகளை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அச்சமும் இது போன்ற ஒரு சட்டத்தை அரசு கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தியது” என்ற வாதம் இருக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
பிரெஞ்சு புரட்சியின் போது பிரபலமான, பின்னர் பிரெஞ்சு குடியரசின் தாரக மந்திரமாகக் கருதப்படும், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு எதிரானதாக இந்தச் சட்டத்தை சிலர் கருதலாம் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply