‘தமிழக தேர்தல் இறுதிப் பிரச்சாரம்’

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நாளை  நடக்கவிருக்கிற நிலையில், பிரச்சாரங்கள் திங்களன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல், காலையிலிருந்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பொது மேடைகளிலும் தொலைக்காட்சி வழியாகவும் இடையறாது கடந்த 15 நாட்கள் பிரச்சாரம் நடைபெற்றது.

திமுக மற்றும் அஇஅதிமுக கூட்டணிகளுக்கிடையேதான் போட்டி. பாரதீய ஜனதா உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. ஆளும் திமுக 119 தொகுதிகள், காங்கிரஸ் 63, பாட்டாளி மக்கள் கட்சி 30, விடுதலைச் சிறுத்தைகள் 10, கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலா 1 என்றவகையில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு அமைந்திருக்கிறது.

அஇஅதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுகிறது, அக்கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் 41, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10, மனிதநேய மக்கள் கட்சி 3, புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலா 2, இந்தியக் குடியரசுக் கட்சி மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலா 1 என்ற வகையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அஇஅதிமுகவை தீவிரமாக ஆதரித்து வந்த வைகோவின் மதிமுக தொகுதிப்பங்கீடு குறித்த பிரச்சினைகளால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டது. அது யாரை ஆதரிக்கும் என்றும் அறிவிக்கப்படவில்லை.

பிரச்சாரத்தில் முதல்வர் கருணாநிதி பல்வேறு நலத்திட்டங்களை தனது அரசு அமல்படுத்தியதை எடுத்துக் கூறினார். சென்னையில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கருணாநிதியின் தலைமையைப் புகழ்ந்தார். முன்னோடி மாநிலம் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்றார் சோனியா. அதனாலேயே திமுகவுடன் கூட்டணி தொடர்வதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருணாநிதியின் குடும்பத்தின் ஆட்சியே நடப்பதாக குற்றஞ்சாட்டினார்.

 கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதில் முன்னெப்போதையும்விட இப்போது மத்திய தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. வாகன சோதனைகளில் வாக்காளர்களுக்கு தரப்படவிருந்த ஏறத்தாழ 42 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் ஆணையம் கூறுகிறது. இதுவரை எக்கட்சியும் கைப்பற்றிய பணத்திற்கு சொந்தம் கொண்டாட முன்வரவில்லை என்பதும் சுவையானதொரு அம்சம்.

ஆணையம் தேவையில்லாமல் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், அறிவிக்கப்படாத அவசரநிலை மாநிலத்தில் நிலவுவதாகவும் முதல்வர் கருணாநிதியும் மற்றக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் குறை கூறினர். தேர்தல்கள் நேர்மையாக நடக்கவேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் எவ்வித அழுத்தத்திற்கும் பணியப்போவதில்ல என்றும் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply