புது வருடத்தில் யாழ். மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் : வீ.ஆனந்தசங்கரி
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் பங்கு கொள்ளுமாறு யாழ். குடா நாட்டு மக்களை வற்புறுத்தி அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாமென தமிழ்ர் விடுதலைக் கூட்டணி படைதரப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் முழு வடிவம் கீழே…
மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கட்டளை அதிகாரி பலாலி
அன்புள்ள ஜெனரல்,
உங்களுக்கு என்னை நான் அறிமுகப்படுத்த தேவையில்லை என நினைக்கின்றேன். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த நாட்டு பிரஜையாக நான் வாழ்ந்திருக்கின்றேன். எனக்கு தற்போது 78 வயதாகி அரைநூற்றாண்டுக்கு மேல் அரசியலில் ஈடுபாடுகொண்டு 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன்.
நான் அரசியலையும் நிர்வாகத்தையும் கலந்து பேசுபவன் அல்ல என்பதை தாங்கள் அறிய வேண்டும். இடம்பெயர்ந்து துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு எத்தகைய மனிதாபிமான சேவையை இராணுவத்தினர் ஆற்றியுள்ளனர் என்பதை நான் மிகவும் பாராட்டியிருக்கின்றேன்.
இராணுவத்தையும் பொலிஸையும் சேர்ந்த பெண் அதிகாரிகள் அங்கவீனர்கள், கடும் நோயாளிகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்களை எவ்வாறு பராமரித்தனர் என்பதை நான் அறிவேன். அண்மைகாலத்தில் தங்களுக்கு நடந்ததை பிள்ளைகள் மறக்கக்கூடிய வகையில் எவ்வாறு பெண் அதிகாரிகள் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என்பதையும் நான் அறிவேன்.
இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் கூட இவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர். படையினர் தமது கடமையை திறமையாக செய்துள்ளனர். தற்போது அவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம்.
வடகிழக்கு மக்கள் ஒரு ரக இராணுவத்தை ஒத்த ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டார்கள் என்பதை நான் தங்களுக்கு கூறத்தேவையில்லை. அவர்கள் போதியளவு அவமானம், சங்கடம், அச்சுறுத்தல். மிரட்டல் ஆகியவற்றுக்கு ஆளாகியிருந்தனர்.
இந்த நிலைமை மீண்டும் திரும்புவதை மக்கள் விரும்பவில்லை. இச் சம்பவங்கள் அவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளமையால் குறிப்பாக பெண்கள் ஒரு துப்பாக்கியை கண்டதும் பைத்தியம் பிடித்தவர்கள் போல் கடந்த காலத்தை நினைத்து மிரண்டு ஓடுகின்றனர்.
நடந்து முடிந்த நல்ல சம்பவங்கள் தற்போது இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. வடகிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒரு துப்பாக்கியையோ, சீருடை அணிந்த இராணுவத்தினரையோ காண விரும்புகின்றார்கள் இல்லை.
அவ்வளவுதூரம் மிக மோசமாக அவர்கள் கடந்த காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர். அவர்கள் தமது உடமைகள் அத்தனையையும் இழந்துள்ளனர். யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகிய பின்னரும் முன்பு வசதியாக வாழ்ந்த வீடுகள் போலன்றி ஆதிகால மனிதர்களின் வீடுகளையொத்த வீடுகளில் வாழ்கின்றனர்.
ஆண்கள் தனது மனைவியரையும், மனைவியர் தமது கணவரையும் இழந்துள்ளனர். சிலர் தமது பிள்ளைகளை இழந்தும், வேறு சிலர் தம் பிள்ளைகளை தடுப்பு முகாமிலும் எதுவித குற்றமும் புரியாமலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதை பார்க்கின்றனர். பலர் குடும்பத் தலைவரை இழந்துள்ளனர். பிள்ளைகள் பலர் பாடசாலைக்கோ, வேறு வேலைக்கோ போக முடிவதில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இம் மக்கள் புதுவருடத்தை கொண்டாடுவது அவர்களுடைய கற்பனைக்கு எட்டாத விடயமாகும். அவர்கள் தமது வாழ்வில் சந்தோஷம் பற்றி நினைக்க முடியாமல் உள்ளனர். சிறு பிள்ளைகள் சில தமாஷாக்களால் கவரப்படலாம். ஆனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவும், குதூகலமாகவும் இருக்கக்கூடிய நிலைமை இல்லை.
அவர்கள் தனிமையில் விடப்படுவதையே விரும்புகின்றனர். அவர்கள் இயலபு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னமும் காலம் உண்டு. பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பலவந்தமாக இவர்களை சேர்ப்பதை தவிர்க்குமாறு தயவு செய்து தங்கள் அதிகாரிகளுக்கு கட்டளையிடுங்கள்.
மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கடந்தகாலத்தில் நடந்ததை மறக்க அவர்களின் உற்றார் உறவினர்கள் திரும்பி வரும்வரை அன்றேல் அவர்களுக்கு என்னகதி ஏற்பட்டது என்பதை தெரியும் வரை கால அவகாசம் வழங்குங்கள். தயவு செய்து கச்சேரிக்கும், விளையாட்டு கழகங்களுக்கும் புதுவருட கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாமென அறிவுறுத்தவும்.
வாழ்க்கையை கொண்டாடுவதற்கு முன்பு அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான நினைவுகளை மறக்க அவகாசம் கொடுங்கள். பெருமளவில் ஓட்டாண்டியாக்கப்பட்ட வன்னி மக்களுக்காக அனுதாபப்படுங்கள் என யாழ் குடாநாட்டு மக்களை விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.
வீ. ஆனந்தசங்கரி, தலைவர் தமிழர் விடுலைக் கூட்டணி.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply